சென்னை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அவர் 110 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி இந்த ஆண்டு 12 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 98 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ரிஷப் பண்ட்டின் பேட்டிங் வரிசையை மாற்றியிருப்பதை முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜஸ்டின் லாங்கருக்கு மூளை இருக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வந்தார். அதுவும் வெறும் 2 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் பண்ட். அவர் அந்த 2 பந்துகளைச் சந்தித்து, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தான் மிகவும் பின்வரிசையில் பேட்டிங் இறங்குவதை ரிஷப் பண்ட் விரும்பவில்லை என்பது, அப்போது அவர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் இருந்து தெரிந்தது. கேப்டனாக இருக்கும் ஒருவருக்கே, பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்ற சுதந்திரம் இல்லை என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.
அது பற்றிப் பேசிய ஸ்ரீகாந்த், "'எனக்கு இந்த விஷயம் புரியவில்லை. எதற்காக ரிஷப் பண்ட் 2 பந்துகள் மட்டுமே மீதமிருந்தபோது பேட்டிங் செய்ய வந்தார்? இதன் மூலம் ஜஸ்டின் லாங்கர் என்ன செய்ய முயற்சிக்கிறார்? அந்த அணி நிர்வாகம் என்ன செய்ய முயற்சிக்கிறது? ஜாகீர் கான் என்ன செய்ய முயற்சிக்கிறார்? எனக்கு இது தெரியவில்லை."
"சிலர் ரிஷப் பண்ட் முன்பே பேட்டிங் செய்ய விரும்பினார், ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்கிறார்கள். ஆனால் அவர்தான் கேப்டன். அவர் யாருடைய அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டும்? ஆனால் ஒரு நாளின் முடிவில் எல்லாமே அணி நிர்வாகத்தின் முடிவுதான். அவர்கள் தான் அங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஜஸ்டின் லாங்கரும் அங்கே இருக்கிறார். அவருக்கு மூளை இருக்கிறதா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்".
இந்த விவகாரம் குறித்து அந்தப் போட்டி முடிந்த போது பேசியிருந்த அனில் கும்ப்ளே, "ரிஷப் பண்ட் தாமதமாக பேட்டிங் செய்ய விரும்பியிருக்கலாம், ஆனால் இது மிகவும் தாமதமானது. ரிஷப் பண்ட் முகத்தில் வெறுப்பு இருந்தது. அவரை பேட்டிங் செய்ய விடவில்லை. அவர் இன்னும் சற்று முன்பே வந்து பேட்டிங் செய்திருக்க விரும்பியிருக்கலாம். ஆனால் இது அவரது முடிவா அல்லது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் முடிவா அல்லது ஆலோசகர் ஜாகீர் கானின் முடிவா? யாருடைய முடிவு?" என்றும் கும்ப்ளே கேள்வி எழுப்பியிருந்தார்.