மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு விட்டதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், ஐபிஎல் நிர்வாகம் அது குறித்து அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான 58வது லீக் போட்டி, ஐபிஎல் தொடர் எப்போது தொடங்குகிறதோ, அப்போது மீண்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முதல் பந்திலிருந்தே அந்தப் போட்டியைத் தொடங்குவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதாலும், வீரர்களின் பாதுகாப்பைக் கருதியும் 2025 ஐபிஎல் தொடரை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஐபிஎல் தொடரை எப்படி, எந்த தேதிகளில் நடத்துவது, எங்கு நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியின் முடிவு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் போட்டிக்கான முடிவு அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மேலும் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள 2025 ஐபிஎல் லீக் புள்ளிப் பட்டியலிலும் இந்தப் போட்டியின் முடிவில் இரு அணிகளுக்கும் புள்ளிகளும் வழங்கப்பட்டதாகக் காட்டப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டி மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கும் போது முதல் பந்திலிருந்து நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 10.1 ஓவர் வரை பேட்டிங் செய்த நிலையில் 122 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்திருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் சாதகமாகவே அப்போது சூழ்நிலை இருந்தது. தற்போது மீண்டும் போட்டியை முதலில் இருந்து தொடங்குவது சரியாகவும் இருக்கும்.
ஏனெனில், ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குப் பிறகு இந்தப் போட்டி மீண்டும் தொடங்கும் போது, அந்தப் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான் மீண்டும் விளையாடுவார்களா எனச் சொல்ல முடியாது. பல வெளிநாட்டு வீரர்களும் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா? அப்போது அவர்களுக்கு வேறு தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயமும் இருக்கலாம். இவற்றை கருத்தில் கொண்டு இந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடத்தப்படும்.