ஹைதராபாத்: தமிழக வீரர் டி. நடராஜன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு இந்த 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அவர் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி தனது திறமையை நிரூபிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவரால் ஒரு பந்து கூட வீச முடியவில்லை. அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது. அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது இந்த ஒரு கண் துடைப்பு வாய்ப்புடன் நடராஜன் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மழை பெய்ததால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் பந்துவீச முடியவில்லை. அதனால் தான் நடராஜன் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
படுமோசமான பேட்டிங் காரணமாக டெல்லி அணி சொற்ப ரன்களே எடுத்திருந்தது. அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்தது. தீவிரமான மழையின் காரணமாக, போட்டியை மீண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் 42 ரன்கள் என்ற இலக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் மீண்டும் மழை பெய்தது. இதை அடுத்துப் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியிலிருந்து தப்பியது. அந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது. ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.
தற்போது நடராஜன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் விளையாடுவாரா அல்லது அவருக்கு இத்துடன் வாய்ப்பு மீண்டும் மறுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முகேஷ் குமார் மிகவும் சராசரியாகப் பந்துவீசி வரும் நிலையில், அவருக்குப் பதிலாக தான் நடராஜன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு லீக் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.