கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஈடன் கார்டன்ஸ் மைதான நிர்வாகத்திற்கு மிரட்டல் ஈமெயில் ஒன்று வந்துள்ளது. அதில் "மைதானத்தை தரைமட்டம் ஆக்கி விடுவோம்" என்ற மிரட்டல் வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதை அடுத்து, பெங்கால் கிரிக்கெட் சங்கம் காவல் துறைக்குத் தகவல் அளித்தது. அதன் பிறகு பெருமளவிலான காவலர்கள் மைதானத்தில் குவிந்தனர். அதன் பிறகு மைதானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என காவலர்கள் சோதனை செய்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. அதன் பிறகு போட்டி திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.

போட்டியின் போது கூடுதலாக ஆயிரக்கணக்கான காவலர்கள் மைதானத்தில் குவிக்கப்பட்டனர். எனினும், மைதானத்திற்கு சுமார் 42,000 ரசிகர்கள் வந்த நிலையில், அவர்களை பதற்றத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்பதற்காக, காவலர்கள் அனைவரும் தங்கள் சீருடை அணியாமல் பொதுமக்கள் போல உடை அணிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தனை சம்பவங்களுக்கு இடையேயும், சுமார் 42,000 ரசிகர்கள் மைதானத்தில் ஒன்று திரண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தொடுத்ததை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட இருந்த போட்டி தரம்சாலாவில் இருந்து மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தரம்சாலா பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மே 11 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
மே 8 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியும் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த மாற்றம் நிகழ்த்தப்படுமா அல்லது ரசிகர்கள் இல்லாத நிலையில் கடும் பாதுகாப்புக்கு இடையே இந்தப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.