மும்பை: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 3வது முறையாக கோப்பையை வென்று சாதனையை படைத்தது. கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இணைந்த முதல் ஆண்டிலேயே அந்த அணி கோப்பையை வென்றது பலருக்கும் வியப்பை அளித்தது. இதன் காரணமாகவே கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரேசில் முன்னிலையில் இருந்தார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பணியாற்றி வரும் சூழலில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் கம்பீரின் பயிற்சி முறைகளை குறித்து பேசி இருக்கிறார். இவர் கேகேஆர் அணிக்காக கடந்த சீசனில் விளையாடியதோடு, கம்பீருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். சியாட் விருது விழாவில் பங்கேற்க மும்பை வந்தார்.

அப்போது விருது நிகழ்ச்சியில் பில் சால்ட் பேசுகையில், கேகேஆர் அணியில் கவுதம் கம்பீரை சந்தித்த முதல் நாளிலேயே நல்ல நட்பு ஏற்பட்டது. ஓய்வறையில் என்ன நடக்கிறது, என்ன பேச வேண்டும் என்பதை கணிப்பதில் கம்பீருக்கு நிகர் யாரும் கிடையாது. ஒரு வீரரை எப்போது தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும், எப்போது ஆக்ரோஷத்துடன் வேலை வாங்க வேண்டும் என்பதை கம்பீர் அறிவார்.
ஒரு சிறந்த பயிற்சியாளருக்கான பண்பு அதுதான். அவருடனான நட்பு இப்போதும் தொடர்ந்து வருகிறது. அவரும் நானும் மொபைலில் அடிக்கடி மெசேஜ்களை பரிமாறிக் கொள்வோம். அவர் கொடுத்த அட்வைஸ் என் வாழ்நாளில் யாருமே சொல்லாதது. இந்தியாவில் எப்போது கடைசி வரை போட்டிகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதை கம்பீர் தான் சொல்லிக் கொடுத்தார்.
என்னுடைய முதல் பயிற்சி செஷன் முடிவடைந்த பின் கம்பீர் என்னுடன் அமர்ந்து சில விஷயங்களை பேசினார். அப்போது அவர், கேகேஆர் அணிக்காக நீ நிச்சயம் அதிக ரன்களை விளாசுவாய் என்பது தெரியும். ஆனால் உன் பேட்டில் இருந்து வரும் ரன்கள் 10 முதல் 20 வரையிலான ஓவர்களில் அதிகமாக இருக்க வேண்டும். தொடக்கம் மோசமாக இருந்தாலும் சரி.. விக்கெட்டை காப்பாற்றி 10 ஓவர்கள் வரை களத்தில் இருந்துவிட வேண்டும்.
10 ஓவர்களுக்கு பின் ரன்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். ஏனென்றால் என்னால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியும் என்பதை அறிந்து வைத்திருந்தார். அதுதான் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆலோசனையாக கருதுகிறேன். முதல் போட்டிக்கு முன்பாகவே எனது ரோல் என்ன என்பதை தெளிவாக சொல்லிவிட்டார் என்று தெரிவித்தார்.