பீகார்: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 வயது வீரரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளை சூரியவன்சி படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சூரியவன்சிக்கு உண்மையிலே 14 வயது தான் ஆகிறதா, அவருடைய பேட்டிங் தன்மையை பார்த்தாலும் சிக்ஸர் அடிக்கும் தன்மையை பார்த்தாலும் அப்படி தெரியவில்லையே என்று பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.

மேலும் சூரியவன்சி பிறந்து வளர்ந்த பீகார் மாநிலத்தில் இதுபோல் வயதை குறைவாக சொல்லி பல கிரிக்கெட் வீரர்கள் சிக்கியிருக்கிறார்கள். மேலும் கிரிக்கெட்டில் இப்படி வயதை குறைவாக சொல்லி களத்திற்கு வருவது என்பது புதிதல்ல. பாகிஸ்தானில் இது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு என எந்த ஒரு சிஸ்டமும் இல்லை. இந்த சூழலில் உண்மையில் வைபவுக்கு 14 வயது தான் ஆகிறதா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கான விடையை தற்போது பார்க்கலாம். ஆம், உண்மையில் வைபவுக்கு 14 வயது தான் ஆகிறது. அவர் எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதை இந்த மூன்று புகைப்படம் தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
அதாவது 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பூனே அணி விளையாடிக் கொண்டிருந்தது. சிஎஸ்கே அணியின் தடை காரணமாக ஆர்பிஎஸ் அணி ஐபிஎல் தொடரில் இருந்தது. அப்போது வைபவின் தந்தை அவரை தூக்கி வைத்துக் கொண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டியை பார்த்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் வைபவ் சிறு வயதாக தான் தெரிகிறார்.
இந்த புகைப்படம் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதேபோன்று இரண்டாவது புகைப்படம் வைபவ் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் அதில் அவருக்கு ஒன்பது வயது என தெரிகிறது. இதேபோன்று 2022 ஆம் ஆண்டு வைபவ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆட்ட நாயகன் விருது வென்றதற்கான போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் வைபவுக்கு 12 வயதாகி இருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் வைத்துப் பார்த்தால் தற்போது 2025 ஆம் ஆண்டு வைபவுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இதனால் வைபவ் குறித்து கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பாமல் அவருடைய சாதனையை பாராட்டி கொண்டாடுவதுதான் சரியானது ஆகும்.