IPL 2025 - 14 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம்.. 17 வயது சிஎஸ்கே வீரருக்கும் வாய்ப்பு
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அனைவரின் கவனத்தையும் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி ஈர்த்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமான வைபவ் சூரியவன்ஷி, பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்.
இளம் வயதிலேயே அபாரமாக விளையாடி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அவர், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒரே நாளில் தேசிய அளவில் ஹீரோவாக சூரியவன்சி உருவெடுத்து இருக்கிறார்.

இந்த தருணத்தில் சூரியவன்சிக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது. ஐபிஎல் தொடரில் பல சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்து தன்னுடைய திறமையை நிரூபித்திருப்பதால் வைபவ் சூரியவன்சியை இந்த ஆண்டு இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான காய்களை தற்போது பிசிசிஐ நகர்த்தி வருகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இங்கிலாந்து செல்கின்றனர். இந்த தொடர் ஐபிஎல் முடிவடைந்த பிறகு நடைபெறுகிறது.
இந்த தொடர் நடைபெறும் அதே காலகட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட வைபவ் சூரியவன்சிக்கு வாய்ப்பு வழங்க தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த 17 வயது வீரரான ஆயுஸ் மாத்ரேவையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19 உலககோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இதற்கான அணியை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இதில் சூரியவன்ஷிக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக தெரிகிறது.இந்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் நடப்பு ஆண்டு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க அஜித் அகார்கர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அப்படி வாய்ப்பு கிடைத்தால், இந்திய அணிக்காக இளம் வயதிலேயே விளையாடிய வீரர் என்ற சாதனையை சூரியவம்ஷி படைப்பார்.


Click it and Unblock the Notifications