ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தை அடித்ததோடு, 14 வயதில் இளம் வீரராக சதம் அடித்தார் என பல சாதனைகளை படைத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம் அவர் மொத்தமாக எட்டு சாதனைகளை படைத்துள்ளார். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, 14 வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, ஐபிஎல் வரலாற்றின் இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

1. ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் முதல் சதம் அடித்த இந்திய வீரர்
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி தனது மூன்றாவது இன்னிங்ஸிலேயே சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன், மனிஷ் பாண்டே, பால் வல்தாட்டி, பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் தங்களின் நான்காவது இன்னிங்ஸிலேயே முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருந்தனர். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி மூன்று இன்னிங்ஸ்களிலேயே முதல் சதம் அடித்து அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
3. சதம் அடித்த இன்னிங்ஸ்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்
இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 265.78 என்பதாக இருந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இன்னிங்ஸ்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், யூசுப் பதான் (37 பந்துகளில் சதம், 270.07) மற்றும் டேவிட் மில்லர் (38 பந்துகளில் சதம், 265.78) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
4. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான அதிகபட்ச கூட்டணி ரன்கள்
இந்தப் போட்டியில் சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி 166 ரன்கள் சேர்த்தார். இது ஐபிஎல் வரலாற்றின் பத்தாவது அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவே அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். இவர்கள் இருவரும் 11.5 ஓவர்களில் 166 ரன்கள் அடித்திருந்தனர். இவர்கள் கூட்டணியின் ரன் ரேட் 14.02 ஆக இருந்தது. அதாவது, இவர்கள் ஒரு ஓவருக்கு 14 ரன்கள் சேர்த்திருந்தனர்.
5. ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்
இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்ஸர்களை விளாசினார். இது ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கையாகும். இதற்கு முன், கிறிஸ் கெயில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2013ஆம் ஆண்டு ஒரே இன்னிங்ஸில் 17 சிக்ஸர்களை அடித்திருந்தார். அதுவே அதிகபட்சமாக உள்ளது.
இந்திய வீரர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்திருக்கிறார். இதற்கு முன் முரளி விஜய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2010 ஆம் ஆண்டில் 11 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
6. ரன் சேசிங்கில் ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்
மேலும், ஐபிஎல் தொடரில் ரன் சேசிங்கில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கையையும் சமன் செய்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனத் ஜெயசூர்யா 11 சிக்ஸர்களை அடித்திருந்தார். அதுவே சேசிங்கில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாக இருக்கிறது. அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்திருக்கிறார்.
7. 18 வயதுக்கு கீழ் 10+ சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர்:
ஒரு ஆடவர் டி20 இன்னிங்ஸில் 18 வயதுக்கு கீழே இருக்கும் ஒரு வீரர் பத்து சிக்ஸர்களுக்கு மேல் அடித்த சாதனையை முதன்முறையாக வைபவ் சூர்யவன்ஷி செய்திருக்கிறார்.
8. மிக இளம் வயதில் டி20 சதம்
டி20 வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். இது சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் சோல் என்பவர் 18 வயது 118 நாட்களில் டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்திருந்தார். அவரது சாதனையை 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி முறியடித்து இருக்கிறார்.
9. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதம்:
ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அடித்திருக்கிறார். இதற்கு முன், கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதற்கு அடுத்து வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் யூசுப் பதான் இருக்கிறார். அவரது சாதனையைத்தான் வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்து இருக்கிறார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் பல சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்றால் அவரைப் போல இளம் வயதில் கிரிக்கெட் வீரராக வரும் ஒருவரால் தான் முடியும். அது சாத்தியமா? என்ற கேள்வி உள்ளது. முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகம் ஆனார்.
பின்னர் கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவானாக மாறினார். அது போன்ற ஒரு வாய்ப்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் திறமையுடன், லேசான புகழ் வெளிச்சம் கிடைத்தாலே வாய்ப்புக்கள் தேடி வரும்.
ஆனால், வைபவ் சூர்யவன்ஷி ஒரு படி மேலே போய் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரிலேயே புகழ் வெளிச்சத்தை பெற்று இருக்கிறார். அவர் தனது தனித் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேச அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து மிரட்டி இருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி இதே ஃபார்மை நீண்ட காலம் தொடர வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள பழக வேண்டும். இந்திய அணி வாய்ப்பை இப்போதே பெறுவதை விட சர்வதேச போட்டிகளில் ஆடினால் தன் மீது ஏற்படும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆட கற்றுக் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள பழக வேண்டும். அவருக்கு இந்திய அணி வாய்ப்பு விரைவில் கிடைக்கும். ஆனால், அதை தக்க வைப்பது தான் அவர் முன் இருக்கும் சவால்.