ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது சர்ச்சை குறித்த கேள்விக்கு அவரது பயிற்சியாளர் மணிஷ் ஓஜா கோபமாக பதிலளித்திருக்கிறார். "அவர் நாட்டின் சொத்து, அவருக்கு எதிரான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை காப்பாற்றுவது எங்களின் கடமை" எனக் கூறியிருக்கிறார் மணிஷ் ஓஜா.
வைபவ் சூர்யவன்ஷி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒன்று புள்ளி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அந்த ஏலத்தின் போது அவரது வயது 13 மட்டுமே. 13 வயது வீரரை எதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்குகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, அதிரடியாக 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார் வைபவ்.

இந்த நிலையில் அவரது வயது தற்போது 14 ஆகிறது. ஆனால், அதில் ஏமாற்று வேலை நடந்திருக்கலாம், இத்தனை குறைந்த வயதில் ஒரு வீரரால் இத்தனை நீளமான சிக்ஸர்களை அடிக்க முடியாது என சிலர் சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தின் போதும் இது போன்ற சந்தேகங்கள் எழுந்தன.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளரான மணிஷ் ஓஜாவிடம் ஒரு பேட்டியின் போது, வைபவ் சூர்யவன்ஷியின் வயது சர்ச்சை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது கோபமடைந்த அவர் அதற்கு ஆவேசமாகப் பதிலளித்தார்.
"வைபவ் சூர்யவன்ஷி வயது சரிபார்ப்புக்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டார். பிசிசிஐ கண்காணிப்பில் நடத்தப்பட்ட எலும்பு அடர்த்தி சோதனையையும் (Bone Density Test) அவர் முடித்துவிட்டார். உங்களுடைய ஆர்வத்திற்காக நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது."
"வைபவ் சூர்யவன்ஷி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, இந்த நாட்டின் சொத்து. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்களில் இருந்து அவரை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை. அவரை போட்டியில் மட்டும் கவனம் செலுத்த விட வேண்டும்" என்று அவர் பேசினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் அவர் எந்த பலனையும் பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் 12 வயதிலேயே அண்டர் 16 அணியில் இடம்பெற்று ஆடினார். அடுத்து 13 வயதாக இருந்தபோதே அண்டர் 19 அணியில் இடம்பெற்று விளையாடினார்.
சிலர் 20 வயதாக இருக்கும் போது, அதை 19 வயது எனக் காட்டி அண்டர் 19 அணியில் இடம்பெற வயது ஏமாற்று வேலையில் ஈடுபட்ட சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில், அவர் வயதை ஏமாற்றி பலனை அடைந்தார் என எந்த வகையிலும் சொல்ல முடியாது.
மேலும், ஏற்கனவே பிசிசிஐ கண்காணிப்பில் அவருக்கு வயது சரிபார்ப்புச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியா அண்டர் 19 அணியிலும் அவர் இடம்பெற்று விளையாடியிருக்கிறார். பிசிசிஐ அத்தனை எளிதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒரு வீரருக்கு அண்டர் 19 அணியில் இடம் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும், தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷியின் வயது பற்றிய சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் நீடித்து வருகின்றன.