IPL 2025: பவுண்டரி அடிப்பதில் எந்த பேட்ஸ்மேனும் தொடாத பிரம்மாண்ட ஐபிஎல் மைல்கல்லை எட்டிய விராட் கோலி
பெங்களூர்: ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் விராட் கோலி திகழ்கிறார். அவர் இதுவரை 249 இன்னிங்ஸ்களில் 8190 ரன்கள் சேர்த்துள்ளார். சிறந்த ஐபிஎல் பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி தற்போது ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமையுடன், மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக முதன்முறையாக 1000 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன் வசமாக்கியுள்ளார்.

இதுவரை அவர் 721 ஃபோர்களையும், 280 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரியும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மொத்தம் 998 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
தற்போது மேலும் 3 பவுண்டரிகளை சேர்த்து 1001 பவுண்டரிகளை அடித்துள்ளார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 920 பவுண்டரிகளுடன் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் டேவிட் வார்னர் 899 பவுண்டரிகளை அடித்துள்ளார். ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் 885 பவுண்டரிகளுடன் இடம் பெற்றுள்ளார். கிறிஸ் கெயில் 761 பவுண்டரிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் விராட் கோலியின் இந்த சாதனை மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 93 ரன்களை சேர்த்து அசத்தினார். மேலும் ஆட்டம் முடிந்தவுடன் பெங்களூரு சின்னசாமி மைதானம் தனது மைதானம் என பேட்டை நங்கூரமிட்டு காட்டினார் ராகுல்.


Click it and Unblock the Notifications