சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி அணி தற்போது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த சூழலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டுகளை கொத்தாக பறி கொடுத்தனர்.

தொடக்க வீரன் பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்களும், பிராப்சிமரன்சிங் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் ஆட்டம் இழந்தது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜாஸ் இங்கிலீஷ் 29 ரன்களிலும் நெஹல் வதேரா ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்பாக விளையாடிய ஷசாங் 33 பந்துகளில் 31 ரன்கள் சேர்க்க, மார்கோ யான்சென் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரரான பில் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். எனினும் விராட் கோலியும், டேவிட் படிக்கலும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு புறம் விராட் கோலி ஆங்கர் ரோல் செய்ய மறுபுறம் படிக்கல் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். படிக்கல் 35 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸரும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.
படிக்கல் ஆட்டம் இழந்தவுடன் போட்டியில் பஞ்சாப் அணி மீண்டும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி தன்னுடைய அனுபவ ஆட்டத்தின் மூலம் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இறுதியில் கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 11 ரன்களும் எடுக்க ஆர்சிபி 18.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஆடுகளம் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மீண்டும் ஆர்சிபிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஆர்சிபி அணி வெளியூரில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.