பெங்களூர்: ஐபிஎல் தொடரின் துவக்க ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. அதற்காகவே அவரை 'மிஸ்டர் ஐபிஎல்' என்று முன்னாள் வீரர்கள் பலரும் அழைத்து வந்தனர். இன்று ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
ஆனால், அப்போதைய கால கட்டத்தில் அவர்களை விட மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. எனினும், இப்போதும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் 'மிஸ்டர் ஐபிஎல்' பட்டத்தை விராட் கோலிக்கு அளித்திருக்கிறார் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக். மேலும் விராட் கோலி தான் 'உண்மையான மிஸ்டர் ஐபிஎல்' எனவும் குறிப்பிட்டு, சுரேஷ் ரெய்னாவைச் சீண்டியிருக்கிறார் விரேந்தர் சேவாக். சுரேஷ் ரெய்னா இப்போதும் ஐபிஎல் போட்டிகள் விளையாடுவதற்கான உடல் தகுதியுடனும், பேட்டிங் திறனுடனும் தான் இருக்கிறார். ஆனாலும் சிஎஸ்கே அணியுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் விலகினார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிக ரன் குவித்த வீரராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதுவரை 256 போட்டிகளில் விளையாடி 8590 ரன்களை எடுத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா 6921 ரன்கள் எடுத்திருக்கிறார். சுமார் 1600 ரன்கள் அதிகமாக எடுத்து முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்த ஆண்டின் ஏழாவது அரை சதத்தை அடித்தார்.
இந்தப் போட்டியின் முடிவில் விரேந்தர் சேவாக் பேசுகையில், "'2016ல் விராட் கோலி ஆடியது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. அதேபோல இப்போது அவர் ஆடியிருக்கிறார், மிகவும் தன்னம்பிக்கையுடன் அவர் ஆடினார். ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக ஆடியது அவருக்கு இன்னும் நம்பிக்கையை அளித்தது. அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார்."
"பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் தனக்கென முதல் சில பந்துகளை எடுத்துக்கொண்டு அதன் பின்னர் இயல்பாக ஆடுவார். ஆனால் இன்று விராட் கோலி முழு உத்வேகத்துடன் முதலில் இருந்தே விளையாடினார். இது விராட் கோலியின் சிறந்த வடிவம் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 900 ரன்களை அடித்ததைப் போலவே இப்போது அவர் ஆட்டம் இருந்தது".
"விராட் கோலி எந்த ரிஸ்க்கும் எடுத்துக்கொள்ளாமல் பேட்டிங் செய்தார். அதனால் தான் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். அதனால் தான் அவரை நான் 'மிஸ்டர் ஐபிஎல்' என்று அழைக்கிறேன். அதாவது உண்மையான 'மிஸ்டர் ஐபிஎல்'. அவர் இதுவரை 11 முறை 400+ ரன்களை ஒரு சீசனில் ஐபிஎல் எடுத்திருக்கிறார். ஏனெனில் அவர் மிகவும் எளிமையாக, ஆபத்து இல்லாத கிரிக்கெட் விளையாடுகிறார். அவர் தனது ஆட்டத்தை நம்புகிறார். இடைவெளிகளில் பந்தை அடிக்கிறார். தனது பலம் எதுவோ அதை பயன்படுத்துகிறார்." "சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக தனக்கு பிடித்தமான ஷாட்களை ஆடுகிறார். பந்து தனது இடத்தில் இருக்கிறதா இல்லையா என்பது அவருக்குத் தெரிகிறது. அதுதான் அவரது சிறப்பு. அவரைப் பற்றி வர்ணனை செய்யும்போது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்பது தான் உண்மை" என்று கூறியிருக்கிறார்.
"உண்மையான மிஸ்டர் ஐபிஎல்" என அழுத்தமாக விராட் கோலி பற்றி அவர் கூறியிருக்கிறார். அதன் மூலம் சுரேஷ் ரெய்னா 'மிஸ்டர் ஐபிஎல்' இல்லை என அவர் மறைமுகமாக சீண்டியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து சேவாக் பலமுறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சிஎஸ்கே அணியின் பேட்டிங் அணுகுமுறையை அவர் கடுமையாக சாடியுள்ளார். பல போட்டிகளில், பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மெதுவாக ஆடுவதாகவும், தேவையான ரன் ரேட்டை எட்டுவதில் தடுமாறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டும். ஆனால் சிஎஸ்கே சில சமயங்களில் டெஸ்ட் போட்டி போல ஆடுகிறது" என்று அவர் ஒரு போட்டியை அடுத்து கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் குறித்தும், சில முக்கியமான தருணங்களில் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். அணியின் சில வியூகங்கள் மற்றும் முடிவுகளையும் அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, அனுபவ வீரர்களை அதிகம் நம்பியிருப்பது சில நேரங்களில் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
தோனியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் அவரது ஸ்டிரைக் ரேட் ஆகியவை சேவாக்கின் முக்கிய விமர்சன இலக்குகளாக இருந்துள்ளன. தோனி மிகவும் தாமதமாக, கடைசி சில ஓவர்களில் மட்டும் களமிறங்குவது சிஎஸ்கே அணியின் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இல்லை என்று சேவாக் பலமுறை கூறியுள்ளார். "தோனி இன்னும் கொஞ்சம் முன்னதாக, அதாவது 15வது ஓவரிலாவது களமிறங்க வேண்டும். அப்போதுதான் அவரால் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாகவோ அல்லது அதிரடியாகவோ ஆடி அணிக்கு உதவ முடியும்" என்பது சேவாக்கின் தொடர்ச்சியான கருத்தாக உள்ளது.
சில போட்டிகளில் தோனி குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியதையும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார். "தோனி ஒரு ஃபினிஷராக அறியப்பட்டவர். ஆனால் இந்த சீசனில் சில போட்டிகளில் அவரால் பழைய வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை. இது அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றும் அவர் விமர்சித்துள்ளார். தோனியின் வயது மற்றும் உடற்தகுதி குறித்தும் மறைமுகமாக சில கருத்துக்களை அவர் முன்வைத்து இருந்தார். அது சிஎஸ்கே ரசிகர்களை சீண்டும் வகையில் அமைந்தது.
சேவாக்கின் இந்த நேரடியான விமர்சனங்கள் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் பலரும் சேவாக்கிற்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர், சேவாக்கின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களே என்றும், ஒரு அணியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது வர்ணனையாளரின் கடமை என்றும் வாதிடுகின்றனர்.
சேவாக் தனது மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசும் இயல்பு கொண்டவர். அவரது விமர்சனங்கள் சில நேரங்களில் கடுமையாக இருந்தாலும், அவை ஆட்டத்தின் பல்வேறு கோணங்களைப் பற்றி ரசிகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. 2025 ஐபிஎல் தொடர் முடியும் வரை சேவாக்கின் கருத்துக்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.