மும்பை: ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக நினைத்து விளையாடுகிறார்கள் என கிளென் மேக்ஸ்வெல் மற்றும் லியாம் லிவிங்க்ஸ்டன் குறித்து முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
மேலும், பிளே ஆஃப் போட்டியில் தோற்றுவிட்டு, எப்போது 'பார்ட்டி வைப்பீர்கள்?' என்று கேட்பார்கள், அந்த தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என வீரேந்தர் சேவாக் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் சரியாக விளையாடவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிப்பதில்லை. ஆனால், தனது தேசிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும், மேக்ஸ்வெல் விடுமுறைக்காகத்தான் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் எனப் பலமுறை கேலி செய்துள்ளனர். ஆனால், அதன் அதிர வைக்கும் உண்மை தன்மையைப் பற்றி வீரேந்தர் சேவாக் விவரித்திருக்கிறார்.
நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் இந்த ஆண்டு இதுவரை சரியாக விளையாடவில்லை.
2025 ஐபிஎல் தொடரில் லியாம் லிவிங்ஸ்டன் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 87 ரன்கள் எடுத்திருக்கிறார், இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். கிளென் மேக்ஸ்வெல் 5 இன்னிங்ஸ்களில் 41 ரன்களும், நான்கு விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். அதுபற்றி வீரேந்தர் சேவாக் வர்ணனையின் போது பேசினார்.
சேவாக் கூறுகையில், "அவர்களிடம் நன்றாக விளையாட வேண்டும் என்ற பசி இல்லை. மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டன் தங்கள் பசியை இழந்துவிட்டார்கள். அவர்கள் இங்கு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் அணியுடன் அவர்களுக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை. அணிக்காக நன்றாக விளையாட வேண்டும், கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இல்லை."
"டேவிட் வார்னர், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் மட்டுமே ஐபிஎல் தொடரில் உண்மையான ஈடுபாட்டுடன் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள். அப்போது மெக்ராத் என்னிடம் இதைச் சொல்லி இருக்கிறார், 'என்னை ஏன் விளையாட வைக்க மறுக்கிறீர்கள்? நான் உங்களுக்குப் போட்டியை வென்று கொடுப்பேன்' என்று சொல்வார். அப்போது நான் கேப்டனாக இருந்த போது, டிர்க் நானஸ் அல்லது மெக்ராத் ஆகிய இருவரில் ஒருவரை தான் விளையாட வைக்க முடியும். இந்த மூன்று வீரர்களைத் தவிர, பல வெளிநாட்டு வீரர்களும் வருவதும் போதுமாக இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "நீங்கள் அரை இறுதியிலோ அல்லது பிளே ஆஃப் போட்டியிலோ தோல்வி அடைந்தால் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அப்போது அவர்கள் 'எப்போது பார்ட்டி?' என்று கேட்பார்கள். நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்றால் உங்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் 'பார்ட்டி எப்போது?' என்று கேட்பார்கள். அந்தப் பார்ட்டியில் அவர்களுக்குப் பிளே ஆஃப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து எந்த வருத்தமும் இருக்காது. இது இந்திய வீரர்களை அதிக அளவில் காயப்படுத்தும். இதை நான் அப்போது எனது அணியின் உரிமையாளரிடமும் சொல்லி இருக்கிறேன்" என்றார் வீரேந்தர் சேவாக்.