“அழாதே வைபவ்” ஒரு வார்த்தையால் வாழ்க்கையை மாற்றிய விவிஎஸ் லக்ஷ்மன்.. டிராவிட் இடம் சொன்னதே அவர்தான்
ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்த நிலையில், பலரும் ராகுல் டிராவிட் அவரை ஏலத்தில் வாங்கியதையும், அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்ததையும் சுட்டிக்காட்டி பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராகுல் டிராவிட்டிடம் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முதலில் சொன்னது விவிஎஸ் லக்ஷ்மன் தான்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி அண்டர் 19 தொடர் ஒன்றில் சரியாக ரன் குவிக்காததால் அழுது கொண்டு இருந்தார். தனக்கு இனி வாய்ப்பு கிடைக்காதோ என்ற கவலையில் இருந்தார். அப்போது விவிஎஸ் லக்ஷ்மன் அவர் அருகே சென்று சொன்ன வார்த்தைகள்தான் இப்போது அவரது வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு பெற காரணமாக இருந்துள்ளது.

13 வயதில் பீகார் அளவில் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷி அப்போது பெயர் பெற்றிருந்தார். அதன் பிறகு அவர் பிசிசிஐ நடத்திய அண்டர் 19 ஒருநாள் சேலஞ்சர் தொடரில் இடம் பிடித்து ஆடினார். அப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த விவிஎஸ் லக்ஷ்மன், அவரது திறமையை முதன்முறையாக அடையாளம் கண்டு, அவரை இந்திய அண்டர் 19 அணிக்கு தேர்வு செய்தார். இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான அண்டர் 19 போட்டிகளில் அவரை விளையாட வைத்தார்.
அதற்கு முன் சேலஞ்சர் தொடரில் இந்தியா பி அணிக்காக அண்டர் 19 போட்டியில் வைபவ் விளையாடிய போது, ஒரு போட்டியில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து விட்டார். தன்னால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனதை நினைத்து அவர் அழுது கொண்டு இருந்தார். அப்போது ஓய்வறைக்கு வந்த விவிஎஸ் லக்ஷ்மன், அவர் அருகே சென்று, 'அழாதே வைபவ். நாங்கள் நீ ரன் குவிப்பதை மட்டும் இங்கே பார்க்க மாட்டோம். ஒவ்வொரு வீரரின் திறமையும் நீண்ட கால அடிப்படையில் எப்படி இருக்கும் என்பதைத்தான் பார்ப்போம்,' என்று சொல்லி அவருக்கு ஆறுதல் அளித்ததுடன், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறார்.
அதன் பிறகுதான் இந்தியா அண்டர் 19 அணியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரது ஆட்டத்தை மிகவும் நெருக்கமாகப் பார்த்த விவிஎஸ் லக்ஷ்மன், அவரைப் பற்றி தனது நண்பரான ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராகுல் டிராவிட், வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியே ஆக வேண்டும் என ஏலத்தில் அவருக்காக ரூ. 1.1 கோடி வரை தொகையை செலவிட்டார்.
தற்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்டின் நன்மதிப்பை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, அதை நிரூபித்துள்ளார். அன்று விவிஎஸ் லக்ஷ்மன் சொன்ன வார்த்தைகளை பின்பற்றி தனது திறமையை மேலும் மெருகேற்றிய வைபவ் சூர்யவன்ஷி, பின்னர் ராகுல் டிராவிட் தனக்கு அளித்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications