ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் அபாரமாக ஆடினார். அவர் அடித்த ஒரு ஷாட் 2021 காபா டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சிக்சரை போன்று அமைந்தது. அதை பார்த்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பலரும் காபா போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த அந்த ஷாட்டையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அடித்த ஷாட்டையும் ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் அதே காபா போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக ஆடினார்.

பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக உள்ளார். அன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் எப்படி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தாரோ, அதே போலவே இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வெற்றி பெற வைத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வாஷிங்டன் சுந்தர் காபா போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் சேர்த்தார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். பின்னர் அந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடிக்காமல் போயிருந்தால் நிச்சயமாக இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்திருக்கும். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் திடீரென நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார் வாஷிங்டன் சுந்தர்.
அவர் வந்தவுடன் அதிரடியாக ஆடினார். ஒரு ஓவரில் இருபது ரன்கள் எடுத்த அவர் ஒட்டுமொத்தமாக 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அவர் இந்த போட்டியில் ஆடிய ஷாட் பேக்வேர்டு ஷாட் காபா டெஸ்ட் போட்டியில் ஆடியதை நினைவு படுத்தியதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.