விசாகப்பட்டினம்: கடந்த 2 போட்டிகளாக தாங்கள் நினைத்ததை போல் திட்டங்கள் நடக்கவில்லை என்று ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் மாற்று திட்டங்கள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்வோம் என்று கூறிய அவர், தோல்வியால் கவலை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய அனிகித் வர்மா 41 பந்துகளில் 74 ரன்களையும், டெல்லி அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை விளாசி அபார வெற்றியை பெற்றது. அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 27 பந்துகளில் 50 ரன்களையும், அபிஷேக் போரெல் 18 பந்துகளில் 34 ரன்களையும் விளாசினர். இதன் மூலமாக ஐதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், எங்களால் சீராக ரன்களை சேர்க்க முடியவில்லை. எதிர்பார்த்த இலக்கையும் நிர்ணயிக்க முடியவில்லை. சில தவறான ஷாட்களை விளையாடினோம். அதேபோல் டெல்லி அணியின் பீல்டிங் நன்றாக இருந்தது. இதனை பெரிய தோல்வியாக கருதவில்லை. சில நேரங்களில் 2 ஷாட்கள் ஆடினாலே, ஃபார்முக்கு வந்துவிடுவோம்.
கடந்த 2 போட்டிகளாக நாங்கள் நினைத்ததை போல் நடக்கவில்லை. அதனால் வேறு திட்டங்களை உருவாக்க தயாராக வேண்டும். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அனிகித் வர்மாவின் பேட்டிங் அனைவரையும் கவர்ந்துவிட்டது. அவரால் மட்டுமே இன்று பவுலிங் செய்வதற்கு நம்பிக்கையுடன் களமிறங்கினோம். அவரின் ஆட்டமும், தயாராகுவதும் கவரும் வகையில் இருக்கிறது.
வலைப் பயிற்சி, பயிற்சி போட்டிகள் அனைத்திலும் ஈர்த்துவிட்டார். 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், உடனடியாக கவலை கொள்ள தேவையில்லை. நிச்சயம் எங்களின் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன். ஏற்கனவே சொல்லியதை போல், வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகளை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.