For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தோனி அவர்களே.. அஸ்வின், ஜடேஜா வேர்ல்டு கப் ஆடப் போறாங்களா?” வெறுத்துப் போன சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த போது தோனி ஒன்பதாம் வரிசையில் இறங்கி ஆடினார். அந்த அணியிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்தது அவர்தான். 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார்.

அவர் சற்று முன்பே பேட்டிங் இறங்கி இருந்தால் சிஎஸ்கே அணி இன்னும் கூடுதலான ஸ்கோர் எடுத்திருக்க முடியும். வெற்றி பெறாவிட்டாலும் வெற்றிக்கு அருகிலாவது வந்திருக்க முடியும். ஆனால், ஏன் அவர் ஒன்பதாம் வரிசையில் இறங்கினார்? என ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

MS Dhoni Chennai Super Kings Royal Challengers Bangalore IPL 2025

இந்த சமயத்தில் தான் அவர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் அளித்த பேட்டியின் ஒரு பகுதி ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் தோனி தான் ஏன் பேட்டிங் வரிசையில் மிகவும் கீழே அதாவது ஏழாவது அல்லது எட்டாவது வரிசையில் இறங்குகிறேன் என்பது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். ஆனால் இது 2024 ஐபிஎல் தொடர் பற்றிய விளக்கமாகும்.

அந்த விளக்கத்தில் தோனி சொன்ன விஷயத்திற்கும், நேற்று அவர் ஒன்பதாம் வரிசையில் இறங்கியதற்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அதைத்தான் சுட்டிக்காட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் தோனி அளித்த பேட்டியில், தான் எட்டாம் வரிசையில் இறங்கி ஆடுவதற்கு காரணமே இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக காத்திருக்கும் வீரர்கள் தான் என சுட்டிக்காட்டி இருந்தார். "அப்போது எனக்கு முழங்காலில் ஒரு பிரச்சனை இருந்தது. கடந்த ஆண்டை விட இப்போது அது நன்றாகவே உள்ளது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பைக்கான தேர்வு அப்போது இருந்தது."

"எங்கள் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே டி20 உலகக்கோப்பை அணிக்கான போட்டியில் இருந்தனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக விரும்பவில்லை. அந்த இடத்திற்கு நான் போட்டி போடவில்லை. அவர்கள், அவர்களின் பணியை சிஎஸ்கே அணியில் செய்கிறார்கள். எனவே, அவர்கள் மேலே நன்றாக ஆடும்போது அணிக்கு அது எந்த வகையிலும் பாதிப்பையும் ஏற்படுத்தாது."

"அனைவரும் அவர்கள் வேலையை சரியாக செய்யும்போது என் மீது அதிக அழுத்தம் இல்லை. அதனால் தான் நான் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தேன்" என்றார் தோனி. 2024 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற இருந்தது. அந்த தொடருக்கான அணியில் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியிருந்ததாலும், முழங்காலில் இருந்த பிரச்சனை காரணமாகவும் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஆடியதாக சொல்லி இருக்கிறார் தோனி. ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் அவரது முழங்கால் பிரச்சனையும் சற்று முன்னேறி இருக்கிறது. மேலும் அடுத்து இந்திய அணி எந்த பெரிய டி20 தொடரிலும் பங்கேற்க போவதில்லை.

அப்படியே பங்கேற்றாலும் சிவம் துபே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே அதற்கான போட்டியில் உள்ளனர். அவர்களும் முதல் ஆறு வரிசைக்குள் தான் பேட்டிங் செய்கின்றனர். நேற்று. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே ஆறாம் வரிசையில் இறங்கினார். அதற்கு அடுத்து தோனி இறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

சிஎஸ்கே அணியும் அப்போது இக்கட்டான நேரத்தில் இருந்தது. தோனி ஏழாம் வரிசையில் பேட்டிங் இறங்கி சில சிக்ஸர்களை அடித்தால் நிலைமையும் மாறக்கூடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஏழாம் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவும், எட்டாம் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இறங்கினர். தோனி அவர்களுக்கு வாய்ப்பளித்து விட்டு ஒன்பதாம் வரிசையில் தான் இறங்கினார்.

இதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள், "சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட ரவீந்திர ஜடேஜாவும், ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்ட அஸ்வினும் எந்த அணி தேர்வில் பங்கேற்க போகிறார்கள்? எதற்காக அவர்களுக்கு தோனி வாய்ப்பளித்தார்? முந்தைய ஆண்டில் உலகக் கோப்பை இருந்தது. அதனால் தோனி மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்து எட்டாம் வரிசையில் இறங்கினார். ஆனால் இப்போது என்ன நடக்கப் போகிறது? எதற்காக அவர்களை முன்னே ஆட விட்டு ஒன்பதாம் வரிசையில் இறங்கினார்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக உள்ளது. துவக்க வீரராக ரச்சின் ரவீந்திராவுடன் களமிறங்கி வரும் ராகுல் திரிபாதி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.

நான்காம் வரிசையில் களமிறங்கிய தீபக் ஹூடாவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடவில்லை. மேலும், ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் பேட்டிங்கின் மீது அதீத நம்பிக்கை வைத்து அவரை ஐந்தாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசையில் இறக்குவதும் சரியான விஷயமாக இல்லை. சாம் கர்ரன் இடத்தில ஒரு முழு நேர ஃ பினிஷர் இடம் பெற வேண்டும்.

தோனி தற்போது நல்ல ஃ பார்மில் இருக்கிறார். நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவரால் கடைசி 10 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது . அவர் சிங்கிள் ரன்கள் ஓடுவதற்கு பதிலாக சிக்ஸர்களை விளாசினாலே போதுமானது.

ராயல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இருந்தார். அவருக்கு அடுத்ததாக தோனி தான் அதிக ரன்களை சேர்த்த பேட்ஸ்மேனாக இருந்தார். மேலும், சிஎஸ்கே அணியில் நேற்று தோனியின் ஸ்ட்ரைக் ரேட் தான் அதிகமாக இருந்தது.

செய்தி சுருக்கம்:

  • ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாம் வரிசையில் இறங்கியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
  • 2024 ஐபிஎல் தொடரில் தான் ஏன் பின்வரிசையில் இறங்கினேன் என்பதற்கான தோனியின் பழைய விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது.
  • 2024ல் டி20 உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்வை கருத்தில் கொண்டு பின்வரிசையில் ஆடியதாக தோனி கூறியிருந்தார்.
  • ஆனால் 2025ல் டி20 உலகக் கோப்பை இல்லாத நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தோனிக்கு முன் இறங்கியது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தோனி ஏன் ஒன்பதாம் வரிசையில் இறங்கினார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Story first published: Saturday, March 29, 2025, 14:42 [IST]
Other articles published on Mar 29, 2025
English summary
IPL 2025: Why Did Dhoni Bat at No. 9? CSK Fans Question Dhoni’s interview after RCB Loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+