For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழனுக்கு தமிழனே எதிரி? நடராஜனுக்கு நடக்கும் அநியாயம்.. தமிழக கோச் ஹேமங் பதானி செய்வது சரியா?

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜனை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட விளையாட வைக்காதது பெரும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. அவரை எந்த இடத்தில் விளையாட வைப்பது என்று நீங்களே சொல்லுங்கள் என அந்த அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்தெறிவது போலப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி தான் நடராஜனை ஓரங்கட்டி வைத்திருக்கிறாரா? என சிலர் சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றனர். ஹேமங் பதானி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தமிழ்நாடு அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். தற்போது டி20 லீக் தொடர்களில் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக அவர் மாறியிருக்கிறார்.

IPL 2025 Why is T Natarajan Sidelined by Delhi Capitals Coach Hemang Badani Under Scrutiny

அதன் காரணமாகவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு பயிற்சியாளராக ஹேமங் பதானி இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரது பயிற்சியின் கீழ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் 2 வெற்றிகளைப் பெற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதன் மூலம் ஹேமங் பதானி ஒரு பயிற்சியாளராக தன்னை நிரூபித்திருந்தாலும், தனது மாநிலத்தைச் சேர்ந்த நடராஜனை ஏன் ஒதுக்கி வைக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன் நடராஜன் தமிழ்நாடு அணிக்காக அதிக அளவில் போட்டிகளில் விளையாடவில்லை. காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, நடராஜனுக்கு சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவர் ஐபிஎல் தொடர் மற்றும் டிஎன்பிஎல் போன்ற டி20 தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கடந்த காலங்களில் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட போதெல்லாம், அப்போது வர்ணனையாளராக இருந்த ஹேமங் பதானி அவரை பெரிதும் பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சென்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என நடராஜனை அவர் பலமுறை பாராட்டி இருக்கிறார். வர்ணனையாளராக இருந்தபோது, நடராஜனுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்.

ஆனால் இன்று நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கும்போது, ஹேமங் பதானி அவரை ஓரங்கட்டி வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, நடராஜனுக்குத் தோள்பட்டையில் காயம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் உண்மை இல்லை. ஒருவேளை ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே அவருக்கு காயம் இருந்தது உறுதியாகிவிட்டது என்றால், அவரால் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றால், நிச்சயமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை விடுவித்துவிட்டு, அவருக்கு இணையாக வேறு ஒரு வீரரைத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

மேலும், டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், 'நடராஜன் எல்லா விதத்திலும் சரியாக இருக்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நடராஜன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதும் உறுதியாகி இருக்கிறது. அப்படி எந்த காயமும் இன்றி விளையாடுவதற்கு தயாராக இருக்கும் நடராஜனை ஏன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை என்ற கேள்வி உள்ளது. ஹேமங் பதானி நடராஜனை ஓரங்கட்டுகிறாரா? என்ன காரணத்துக்காக இப்படிச் செய்கிறார்? என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்களில் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் சராசரியாகவே செயல்பட்டு வருகிறார். அவரை ஒரே அடியாக அணியிலிருந்து நீக்காவிட்டாலும், அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவருக்குப் பதிலாக நடராஜனை விளையாட வைத்துப் பார்க்கலாம். ஒருவேளை நடராஜன் அந்த போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கலாம்.

குறிப்பாக, நடராஜன் கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீசும் திறன் உடையவர். திடீரென ஒரு சூப்பர் ஓவர் வீச வேண்டும் என்றால், அதற்கு நிச்சயமாக நடராஜனை நம்பலாம். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மற்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், ஒருவரால் மட்டுமே அணியின் பந்துவீச்சை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நடராஜன் பவர் பிளே ஓவர்களின் போது ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை வீசிவிட்டு, அதன் பின்னர் கடைசி நான்கு ஓவர்களின் போது இரண்டு அல்லது மூன்று ஓவர்களை வீசலாம். அதன் மூலம் அவர் ரன்களை வெகுவாகக் கட்டுப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் அளிப்பார். இது எதிரணியின் சேசிங்கின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.

ஆனால், நடராஜன் எந்தவித திறமையும் இல்லாத ஒரு சாதாரண பந்துவீச்சாளர் என்பது போல வெளியே அமர வைக்கப்பட்டிருக்கிறார். இதில் இந்தியா முழுவதும், 'நடராஜன் ஏன் விளையாட வைக்கப்படவில்லை?' எனக் கேட்கும் ரசிகர்கள் மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், 'எதற்காக அணியில் எந்த இடத்திலும் பொருந்தவில்லை என நீங்கள் நினைக்கும் ஒரு வீரருக்கு, ஏலத்தில் 10.75 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்?' என்பதுதான்.

ஏலத்தின் போது நடராஜனின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் மட்டுமே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்கள் அவரை மற்ற அணிகளுடன் போட்டி போட்டு 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். அவர் கடைசி ஓவர்களின் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது, ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அப்படி இருந்தும் நடராஜனை ஓரங்கட்டி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நாம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் சிலர் மிக வெளிப்படையாக விமர்சனங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளில் 3 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் 2 வெற்றிகளைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. அதன் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், அதிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்தக் கட்டத்தில், நடராஜனுக்கு வாய்ப்பளித்து பந்துவீச வைத்தால், அது எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாக அமைய வாய்ப்பிருக்கிறது. இனியாவது ஹேமங் பதானி, நடராஜனுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வாய்ப்பளிப்பாரா? அல்லது இந்த ஆண்டு முழுவதும் அவரை ஓரங்கட்டி வைப்பாரா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Story first published: Saturday, May 3, 2025, 15:13 [IST]
Other articles published on May 3, 2025
English summary
IPL 2025: Why is T. Natarajan Sidelined by Delhi Capitals? Coach Hemang Badani Under Scrutiny
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+