பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் தோனியிடம் சிக்கித் தானே ஆக வேண்டும் என சில ரசிகர்கள் அவரை எச்சரித்து வருகின்றனர்.
யாஷ் தயாள் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ஜாகிர் கான் மற்றும் தான் தோனிக்கு பந்து வீசி விக்கெட் வீழ்த்தும் வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. ஜாகிர் கானும், தானும் ஒரே மாதிரி பந்து வீசி, ஒரே மாதிரி தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதை சுட்டிக்காட்டி இந்த வீடியோவை யாஷ் தயாள் வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால், தோனியின் விக்கெட்டை வீழ்த்தி விட்டேன் அவர் என தற்பெருமை பேசுவதாக எண்ணி சிஎஸ்கே ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் தோனி போன்ற ஒரு ஜாம்பவானை அவமதிக்கும் வகையில் அவர் விக்கெட்டை ஒரு முறை வீழ்த்துவிட்டு, அதை பெரிதுபடுத்தி காட்டுவது தேவையற்ற செயல் என சிஎஸ்கே ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டி கிட்டத்தட்ட ஒரு நாக் அவுட் போட்டியாக இருந்தது.
அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் தோனி விக்கெட்டை யாஷ் தயாள் வீழ்த்தி இருந்தார். அது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அதைத்தான் யாஷ் தயாள் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. 2023 ஐபிஎல் தொடரில் இதே யாஷ் தயாளின் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார் ரிங்கு சிங். அப்போது யாஷ் தயாள் தனது கிரிக்கெட் கேரியரின் மோசமான நிலைக்கு சென்றார். அவரை பலரும் வேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.
ஆனால், அதில் இருந்து ஒரே ஆண்டில் மீண்டு வந்த யாஷ் தயாள் சிஎஸ்கே அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கடைசி ஓவரில் கட்டுக்கோப்பாக, ரன் கொடுக்காமல் பந்து வீசியதோடு, தோனியின் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தி இருந்தார். அதனால், அதை மிகப்பெரிய சாதனையாக அவர் பார்க்கிறார்.
அதனாலேயே இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால், இது சிஎஸ்கே ரசிகர்களை எரிச்சலூட்டி உள்ளது. அவர்கள் 2025 ஐபிஎல் தொடரில் தோனி இதற்கு பதிலடி கொடுப்பார் என கூறி வருகின்றனர்.