சென்னை: தோனியின் பலவீனம் என்ன என்பதை வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாளுக்கு சொல்லிக் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2024 ஐபிஎல் தொடரில் வீழ்த்த காரணமாக இருந்து இருக்கிறார் விராட் கோலி. தோனியின் பலவீனத்தை விராட் கோலி தனக்கு கூறியதை போட்டு உடைத்து இருக்கிறார் யாஷ் தயாள். 2024 ஐபிஎல் தொடரில் முக்கியமான தருணத்தில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது தான். அதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது. 2024 மே 18 அன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன போட்டியை எந்த ஒரு சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகரும் மறந்து இருக்க மாட்டார்.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 218 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி தடுமாறிய போதும் 19 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது சிஎஸ்கே. அதே சமயம், 17 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. சிஎஸ்கே அணியை 18 ரன்னுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வீழ்த்தினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் நடந்தது.
போட்டியின் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி 17 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது கடைசி ஓவரின் முதல் பந்தை தோனி சந்தித்தார். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் பந்து வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் தோனி. அதனால் யாஷ் தயாள் பதற்றம் அடைந்தார்.
அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். "அப்போது விராட் கோலி எனது அருகில் வந்தார். தோனிக்கு அதிக வேகத்தில் பந்து வீசினால் அவர் சிக்ஸ் அடிப்பார். எனவே, அதிக வேகத்தை பயன்படுத்தாதே என்றார். அவர் என்னை அமைதிப்படுத்தினார். முதல் பந்தில் சிக்ஸ் அடித்த பின் விராட் கோலி எனது அருகில் வந்து என்னை அமைதிப்படுத்தினார். விராட் கோலி அப்போது என்னிடம் பேசியது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது." என்றார் யாஷ் தயாள்.
இந்த சம்பவத்திற்கு பின் இரண்டாவது பந்திலேயே தோனியின் விக்கெட்டையும் வீழ்த்தினார் யாஷ் தயாள். அதன் பின் சிஎஸ்கே அணி கூடுதலாக ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. அந்தப் போட்டியின் முடிவில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.