IPL 2025: உலகக்கோப்பை நாயகனுக்கு கோச் பதவி.. அதிர விட்ட குஜராத் டைட்டன்ஸ்.. RR செல்லும் டிராவிட்?
மும்பை: யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ஜாம்பவான் முன்னாள் இந்திய வீரரை தங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வென்று கொடுத்த யுவராஜ் சிங்கை, குஜராத் டைட்டன்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2022 இல் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த அணியின் இயக்குனராக முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் சோலாங்கி செயல்பட்டார். அவர்கள் இருவரும் 2024 ஐபிஎல் தொடருடன் விடை பெற முடிவு செய்துள்ளனர்.

ஆஷிஷ் நெஹ்ராவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 ஐபிஎல் கோப்பை வென்றது. அதற்கு அடுத்த ஆண்டு அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா விலகினார். 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்சி அனுபவமே இல்லாத சுப்மன் கில் தலைமையில் ஆடிய அந்த அணி தடுமாற்றத்தை சந்தித்தது. புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது.
இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகர் கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சென்று விட்டார். தற்போது ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் விக்ரம் சோலாங்கியும் வெளியேற உள்ளனர். இனி 2025 ஐபிஎல் தொடரில் இருந்து அந்த அணி புதிய அத்தியாயத்தை துவங்க உள்ளது. எனவே, உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கை தங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏதேனும் ஒரு பயிற்சியாளர் பதவி வழங்குமாறு ஆசிஸ் நெஹ்ராவிடம் கேட்டிருந்ததாகவும், அப்போது அவர் மறுத்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் யுவராஜ் சிங். அந்த வகையில் அவர் ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வாய்ப்பு உள்ளது.
யுவராஜ் சிங் தற்போது எந்த அணிக்கும் பயிற்சியாளராக இல்லை என்றாலும், அவர் இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் அதே மாநில கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவை பட்டை தீட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருமே தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக உயர்ந்துள்ளார். இளம் வீரர்களை பட்டை தீட்டி சிறப்பாக செயல்பட வைப்பதில் யுவராஜ் சிங் சிறந்து விளங்கி வருகிறார் என்பதாலேயே அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதேபோல, சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்ற ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் 2015 முதல் 2024 வரை பிசிசிஐ-யின் பல்வேறு பதவிகளில் இருந்தார். அதன் காரணமாகவே இந்த ஆண்டுகளில் அவர் ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளராக செயல்படவில்லை. 2015 ஐபிஎல் தொடர் வரை அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இடம் பெற்று இருந்தார். தற்போது இந்திய அணியில் இருந்து விடை பெற்று இருப்பதால் அவர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாகவும், அந்த அணி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications