மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக இருந்த சாகல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த சூழலில் இந்திய அணிக்காக 72 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் சாகல் கைப்பற்றி இருந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சாகல் பெற்று இருந்த சூழலில் அதனை அண்மையில் ஆர்ஸ்தீப் சிங் முறியடித்தார். இந்த சூழலில் 34 வயதான சாகல் கடைசியாக இந்திய அணிக்கு விளையாடி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த சூழலில் சாகல் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அபாரமாக செயல்பட்டும், தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான சாகல் தற்போது இங்கிலாந்துக்கு சென்று அங்கு நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போகிறார்.
இதற்காக நார்த்தாம்ப்டன்ஷிர் அணி உடன் சாகல் ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு சாஹல் 4 போட்டிகளில் நார்த்தாம்ப்டன்ஷிர் அணிக்காக விளையாடி 19 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சாகல் நார்த்தாம்ப்டன்ஷிர் அணிக்காக விளையாட போகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கடந்த சீசனில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நான் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. அந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் பல சிறந்த வீரர்கள் இருந்தார்கள்."
"மீண்டும் அந்த அணியில் இடம்பெறுவதை நினைத்து ஆர்வமாக இருக்கின்றேன். கடந்த ஆண்டு சீசன் முடிவில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட் விளையாடினோம். அதேபோல் ஒரு வெற்றிகரமான செயல்பாட்டை இம்முறையும் வெளிப்படுத்துவோம்" என்று சாகல் தெரிவித்துள்ளார். சாகலின் வருகை குறித்து பேசி உள்ள பயிற்சியாளர் டேரன் லீமன் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர், "எங்கள் அணிக்கு வரப்போகிறார் என்பது நினைத்து மகிழ்ச்சியாக இருக்கின்றது."
"அவரிடம் நல்ல அனுபவம் இருக்கிறது. அவர் ஒரு ஜென்டில்மேன். ஜூன் மாதத்தில் தொடங்கி சீசன் முடியும் வரை அவர் எங்களுடன் தான் பயணிக்க போகிறார்" என்று லீமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்த சாகல் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்று இருக்கிறார்.
அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதனால், ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் சாகல் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளார். சாஹல், அங்கு விளையாடும் அதே நேரத்தில் இந்திய அணியும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.