IPL 2026: “சூப்பர் ஓவரில் இப்படிதான் ஜெயித்தோம்”.. லக்னோவை வீழ்த்தியது பற்றி ரஹானே பேச்சு
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சூப்பர் ஓவர் வரை சென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. மரண பயத்தை காட்டிய இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே, தனது இதயத் துடிப்பு இப்போதுதான் சீரடைந்துள்ளது என்றார். மேலும், தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து, சூப்பர் ஓவரில் லக்னோவை வெறும் 1 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அணியின் வெற்றி ரகசியத்தை கேப்டன் ரஹானே விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
போட்டி முடிந்த பின் பேசிய ரஹானே, "தற்போதுதான் எனது இதயத் துடிப்பு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இந்த வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. குறிப்பாக பேட்டிங்கில் 16 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் விளையாடிய விதம் அபாரமானது. ரிங்கு சிங்கின் அந்த இன்னிங்ஸ் தான் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது. இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் அவர்தான். கடைசி ஓவர்களில் அவர் ரன்களைக் குவித்த விதம் எங்களுக்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. அவரது அசுரத்தனமான ஆட்டம் உண்மையில் வியக்க வைக்கிறது" என புகழாரம் சூட்டினார்.

மைதானத்தின் சூழல் குறித்துப் பேசிய அவர், "ஏற்கனவே சையத் முஷ்டாக் அலி தொடரில் இங்கு விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. இந்த ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிவேன். இங்கு 160 முதல் 170 ரன்கள் என்பது ஒரு சவாலான இலக்காக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், பவர்பிளே ஓவர்களில் நாங்கள் மிக மோசமாக பேட்டிங் செய்தோம். இது நாங்கள் வரும் காலங்களில் சரி செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும். 156 ரன்கள் என்ற சிறிய இலக்கை தற்காக்கும் போது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆட்டம் முடியும் வரை எதுவும் முடிந்துவிடவில்லை என்பதற்கு இந்த போட்டியே சாட்சி" என்றார்.
மேலும் சுழற்பந்து வீச்சாளர்களைப் பாராட்டிய ரஹானே, "நடு ஓவர்களில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் ஆட்டத்தை எங்களிடம் கொண்டு வந்தனர். ஒரு விக்கெட் விழுந்தால் ஆட்டம் மாறும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். சூப்பர் ஓவரை பொறுத்தவரை சுனில் நரேன் தான் எங்களிடம் இருந்த சிறந்த ஆப்ஷன். அவர் தொடர்ந்து அபாரமாகப் பந்துவீசி வருகிறார். மைதானத்தின் பெரிய எல்லைகளை நோக்கி சிக்ஸர் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதல்ல என்பதைப் புரிந்து செயல்பட்டோம். கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் போன்ற இந்திய இளம் வீரர்கள் மிகுந்த தெளிவோடும் நம்பிக்கையோடும் செயல்படுவது அணிக்கு பலம் சேர்க்கிறது" எனத் தெரிவித்தார்.
இறுதியாக பந்துவீச்சு வியூகங்கள் குறித்துப் பேசிய அவர், "மைதானத்தின் நீளமான எல்லைகளைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் ரன்-அப் மற்றும் பந்தை வீசுவதில் மட்டும் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினோம். அது சரியாக வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தனது உரையை நிறைவு செய்தார். 155 ரன்கள் எடுத்திருந்த லக்னோவை சூப்பர் ஓவரில் வெறும் 1 ரன்னில் சுருட்டி கொல்கத்தா பெற்ற இந்த வெற்றி, இந்த சீசனின் மிகச்சிறந்த திரில்லர் வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
