"உனக்கு 15 வயசு இல்லனு சொல்லுவாங்க..".. வைபவ் சூர்யவன்ஷி சாதனை பற்றி ஆண்ட்ரே ரசல் பதிவு
சண்டிகர்: 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிதறடித்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் வியந்து பாராட்டி உள்ளார். வைபவின் அபார ஆட்டத்தைக் கண்டு தானும் ஒரு பெரிய ரசிகன் ஆகிவிட்டதாக ரசல் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய வைபவ், ஹைதராபாத் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்த அவர், நடப்பு சீசனில் தனது மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை 65 ஆக உயர்த்தினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் முறியடித்தார். இந்த சீசனில் இதுவரை 680 ரன்களை அவர் குவித்துள்ளார்.

வைபவின் இந்த அதிரடி ஆட்டத்தைக் கண்டு உற்சாகமடைந்த கொல்கத்தா அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரே ரசல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறப்பு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
"வாழ்த்துகள் தம்பி! உனக்கு 15 வயது இல்லை என்று பொறாமைப்படுபவர்கள் சொல்லக்கூடும். அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? 30 வயது வீரர்கள் கூட நீ செய்யும் இந்தச் சாதனையைச் செய்யப் போராடி வருகிறார்கள். நீ உனது ஆட்டத்தைத் தொடரு. நான் உனது மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன். பந்தைப் பார், அடித்து நொறுக்கு (See ball hit ball)" எனப் பதிவிட்டுள்ளார்.
வைபவின் வயது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரசலின் இந்தப் பதிவு அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 243 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டரை ஜோப்ரா ஆர்ச்சர் சரித்தார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை ஆர்ச்சர் அடுத்தடுத்து வெளியேற்றியதால் ஹைதராபாத் அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்ததாக நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. 15 வயதிலேயே ஜாம்பவான்களை வியக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தற்போது உற்றுநோக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications