IPL 2026: ஆர்சிபி பந்துவீச்சை பொளந்த ரகுவன்ஷி, ரிங்கு சிங்.. கொல்கத்தா அணி 192 ரன்கள் குவிப்பு
ராய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்று முதலில் பந்துவீசினால் கொல்கத்தா அணியை எளிதாக சுருட்டிவிடலாம் என கணக்கு போட்ட பெங்களூரு அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. கொல்கத்தா அணியின் அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
மழையால் சற்று தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். 8 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என 18 ரன்கள் எடுத்து மிரட்டிய பின் ஆலனை புவனேஸ்வர் குமார் வெளியேற்றினார். சிறிது நேரத்திலேயே ரஹானே 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் பவர் பிளே ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது.

இதன் பின் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். பெங்களூரு பந்துவீச்சை மிக நேர்த்தியாக கையாண்ட இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் கிரீன் ரசிக் சலாம் பந்துவீச்சில் வீழ்ந்தார். ஆனால் மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்ற ரகுவன்ஷி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அபாரமாக அரைசதம் கடந்தார்.
கடைசி கட்டத்தில் ரகுவன்ஷியுடன் இணைந்த அதிரடி மன்னன் ரிங்கு சிங் தனது வழக்கமான ஆட்டத்தை காட்டினார். பந்துகள் சிக்சர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறந்தன. இவர்களின் ஆட்டத்தால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 46 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்த ரகுவன்ஷி ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் மிரட்டிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
ஆர்சிபி பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ஹேசில்வுட் 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ரசிக் சலாம் 35 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 48 ரன்களையும், குருணால் பாண்டியா 39 ரன்களையும் வாரி வழங்கி விக்கெட் ஏதுமின்றி ஏமாற்றம் அளித்தனர்.


Click it and Unblock the Notifications
