சுப்மன் கில் செய்தது தப்பு.. கடைசி 8 ஓவரில் 4 ஓவரை ஒரே பவுலருக்கு கொடுப்பதா? கும்ப்ளே விமர்சனம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்த மிகப்பெரிய தவறை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடிய போது, குஜராத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவை கேப்டன் சுப்மன் கில் 13வது ஓவரில் தான் பந்துவீச அழைத்தார். கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முக்கிய பவுலரான அவரை இவ்வளவு தாமதமாக பந்துவீச அழைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து வெளிப்படையாக விமர்சித்த அனில் கும்ப்ளே, பிரசித் கிருஷ்ணாவை 13வது ஓவரில் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்தார். தாமதமாக பந்துவீச வந்தாலும் அவர் 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர், சஷாங்க் சிங் போன்றோரின் விக்கெட்டுகளை அவர் எடுத்தார்.
ஆனால், ஒரு பவுலரின் 4 ஓவர்களையும் இன்னிங்ஸின் கடைசி 8 ஓவர்களில் வீச வைப்பது எந்த வகையிலும் சரியான வியூகம் கிடையாது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து பிரசித் கிருஷ்ணாவை 6 முதல் 10 ஓவர்களுக்குள் பந்துவீச அழைத்திருக்க வேண்டும். அவரை இறுதிக்கட்ட ஓவர்களில் பயன்படுத்தியதால் தான் தனது கடைசி ஓவரில் அவர் 14 ரன்களை வாரி வழங்கினார் என அனில் கும்ப்ளே தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றியை அறிமுக வீரரான கூப்பர் கொனோலி உறுதி செய்தார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே களமிறங்கிய அவர் 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது முதிர்ச்சியான அதிரடியால் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கூப்பர் கொனோலி, பஞ்சாப் அணியின் முன்னாள் வீரரான ஷான் மார்ஷை தனது கிரிக்கெட் ரோல் மாடலாக கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போலவே விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே மனம் தளராமல் ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார்.


Click it and Unblock the Notifications