பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெங்கடேஷ் ஐயரை 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி குறித்து அனில் கும்ப்ளே கணித்துள்ள விஷயம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் சமீபத்தில் அபுதாபியில் நடந்து முடிந்தது. இதில் நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, கொல்கத்தா அணியுடன் போட்டி போட்டு ஆல் - ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கியது.
கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தால் கேகேஆர் அணியால் கழற்றிவிடப்பட்ட வெங்கடேஷ் ஐயரை, இந்த முறை 7 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி வாங்கியுள்ளது. இது அந்த அணியின் அதிகபட்ச ஏலத் தொகையாகும். ஆல்-ரவுண்டரான இவர் அணியின் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஜியோ ஸ்டார் சேனலில் பேசிய அனில் கும்ப்ளே, "வெங்கடேஷ் ஐயர் நிச்சயம் திறமையான வீரர்தான். ஆனால், ஆரம்பப் போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான். ஏனென்றால், ஆர்சிபி இப்போது ஒரு சாம்பியன் அணி. கோப்பையை வென்ற ஒரு வெற்றிக் கூட்டணியை எந்த அணியும் அவ்வளவு சீக்கிரம் மாற்ற விரும்பாது. அணியின் நம்பிக்கையைக் குலைக்காமல் இருக்கவே அவர்கள் விரும்புவார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "ஆர்சிபி அணி ரவி பிஷ்னோய் போன்ற பெரிய ஸ்பின்னர்களை ஏலத்தில் எடுக்காததற்கும் இதுவே காரணம். ஏற்கனவே அணியில் சுயாஷ் சர்மா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு சீனியர் ஸ்பின்னரை உள்ளே கொண்டு வந்து, இளம் வீரரான சுயாஷ் சர்மாவுக்குத் தேவையற்ற நெருக்கடியை கொடுக்க ஆர்சிபி விரும்பவில்லை. அதே லாஜிக்தான் வெங்கடேஷ் ஐயருக்கும் பொருந்தும்" எனத் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 23.75 கோடிக்கு விலை போன வெங்கடேஷ் ஐயர், அந்த சீசனில் படுமோசமாகச் சொதப்பினார். 11 போட்டிகளில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 20.29 மட்டுமே. இந்த மோசமான ஃபார்ம் காரணமாகவே அவர் கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மொத்தம் 62 ஐபிஎல் போட்டிகளில் 1,468 ரன்கள் (ஒரு சதம், 12 அரைசதம்) அடித்துள்ள இவரது அனுபவம் ஆர்சிபிக்கு உதவும் என்றாலும், கும்ப்ளேவின் கணிப்புப்படி அவர் ஆரம்பத்தில் பெஞ்சில் தான் அமர வேண்டியிருக்கும்.
அணியின் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொண்ட ஆர்சிபி நிர்வாகத்தைப் பாராட்டிய கும்ப்ளே, "ஆர்சிபி மிகத் தெளிவாகத் திட்டமிட்டுள்ளது. முக்கிய வீரர்களுக்குச் சரியான மாற்று வீரர்களை (Backups) எடுத்துள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு மாற்றாக ஜேக்கப் டஃபி, ஃபில் சால்ட்டுக்கு நேரடி மாற்றாக ஜோர்டான் காக்ஸ், யாஷ் தயாளுக்கு முன்னேற்பாடாக இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மங்கேஷ் யாதவ் என அணியின் பலத்தை அவர்கள் சிதறவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்" என்று முடித்தார்.
7 கோடி கொடுத்து வாங்கிய வீரரை ஆர்சிபி பெஞ்சில் அமர வைக்குமா? அல்லது கும்ப்ளேவின் கணிப்பு பொய்யாகுமா?