மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்த சூழலில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு படி மேலே சென்று அணிகளின் பலத்தை வைத்து பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்பது குறித்து அவர் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி பிளே ஆப் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக தகுதி பெறும் என்றும் அந்த அணி ஏலத்திற்கு முன்பே காய்களை நகர்த்தி தங்களுக்கு தேவையான வீரர்களை டிரேடிங் மூலம் வாங்கிவிட்டதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் மற்றும் ரூதர்போர்டு ஆகியோர் அணிக்கு வந்தது மட்டுமல்லாமல் குயிண்டன் டி காக் அடிப்படை விலைக்கே கிடைத்திருப்பது மிகப்பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது அணியாக அஸ்வின் நடப்பு சாம்பியன் ஆன, ஆர்சிபிஐ தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் ஹேசல்வுட் உடல் தகுதி மற்றும் யாஷ் தயால் விளையாடுவது ஆகியவை மிகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று ஆர் சி பி அணி வெங்கடேஷ் ஐயரை சேர்த்திருப்பது சிறப்பான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது அணியாக கடந்த முறை இறுதிப்போட்டி வரை சென்ற பஞ்சாப் அணியை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். தற்போது ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மற்றும் கூப்பர் கோன்லி ஆகியோரை சேர்த்து இருப்பது நல்ல முடிவு என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். அதேபோன்று நான்காவது அணியாக ராஜஸ்தான் ராயல்சை அஸ்வின் தேர்வு செய்துள்ளார்.
சாம்சன் சென்றாலும் ஜடேஜா, ஷாம் கரண் போன்ற வீரர்கள் இணைந்து இருப்பதும் ரவி பிஸ்னாய் அணியில் இருப்பதும் பலத்தை அதிகரித்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இந்த சூழலில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை குறிப்பிடவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சிஎஸ்கே அணி மீது உள்ள வன்மத்தால் அஸ்வின் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாகவும், தமது முன்னாள் அணியையே அஸ்வின் மறந்து விட்டதாகவும் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.