மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடைகாலத்தில் விருந்து படைக்கும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. கடைசியாக அந்த அணி 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தோனி தற்போது மதுரை வந்து கிரிக்கெட் மைதானத்தை திறந்த போது நல்ல உடல் தகுதியுடன் இருந்துள்ளார். இதனால் தோனி அடுத்த சீசன் கண்டிப்பாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வந்திருக்கிறது. இதன் மூலம் தோனி சிஎஸ்கே அணியில் எந்த வீரர்களை விடுவிப்பது என்று ஒரு பட்டியலை தயார் செய்து ருதுராஜிடம் கொடுத்திருப்பதாகவும், இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி, ஷாம்கரன், கான்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சிஎஸ்கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம். ஏற்கனவே சிஎஸ்கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது.நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்பதால் இறுதி கட்டப்பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.