2026 ஐபிஎல் ஏலம் எப்போது? தேதி வெளியானது.. மகளிர் ஐபிஎல் மெகா ஏலம் குறித்த முக்கிய அப்டேட்!
மும்பை: 2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை ஏலம் இந்தியாவிலேயே நடக்க அதிக வாய்ப்புள்ளது என்பது ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின்படி, 2026 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 15 நடைபெற உள்ளது. மேலும், பத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 15 எனவும் பிசிசிஐ-யால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கபடப் போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

கடந்த 2023-ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2024-ம் ஆண்டுக்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றன. இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஏலம் நடக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போதைய புதிய தகவலின்படி, 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவிலேயே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், இந்தியாவில் எந்த நகரத்தில் 2026 ஐபிஎல் ஏலம் நடைபெறும் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ-யிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் ஐபிஎல் (WPL) முதல் மெகா ஏலம்
ஐபிஎல் ஏலம் குறித்த செய்திகளுடன், மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் ஏலம் குறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025 மகளிர் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணியும், தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டை குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் விடுவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் போன்ற இந்திய உலகக் கோப்பை நட்சத்திர வீராங்கனைகளை அந்தந்த அணிகள் தக்கவைத்துள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கடந்த தொடரின் இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா ஐந்து வீராங்கனைகளைத் தக்கவைத்துள்ளன.
புதிய 'ரைட்-டு-மேட்ச்' (RTM) விதி:
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக, அணிகள் 'ரைட்-டு-மேட்ச்' (RTM) என்ற புதிய வாய்ப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதன் மூலம், ஒரு அணி விடுவித்த வீராங்கனையை ஏலத்தில் வேறு அணி எடுத்தாலும், அதே தொகைக்கு அவரைத் திரும்ப வாங்கும் உரிமையை அந்த வீராங்கனையின் பழைய அணி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications