IPL 2026: சிஎஸ்கே-விடம் படுதோல்வி அடைந்த பின் பிட்ச் பற்றிய உண்மையை உடைத்த அக்சர் படேல்
டெல்லி: சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த பிறகு, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் தனது தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். 156 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கே 18 ஓவர்களுக்குள்ளேயே எட்டிப் பிடித்தது எப்படி? டெல்லி அணியின் வியூகம் எங்கே சொதப்பியது? ஆடுகளம் யாருக்குச் சாதகமாக இருந்தது? என்பது குறித்த பல விஷயங்களை அக்சர் படேல் பேசினார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற 48-வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறித்துப் பேசிய அக்சர் படேல், "முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் இருந்த நிலையை வைத்துப் பார்த்தால் 155 ரன்கள் என்பது ஒரு கௌரவமான ஸ்கோர் தான். ஆனால், நாங்கள் 8 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியும் இந்த ரன்களை மட்டுமே எடுத்தது வருத்தமளிக்கிறது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டம் நிச்சயம் எங்கள் பக்கம் இருந்திருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ஆடுகளத்தின் தன்மை குறித்து விளக்கிய அக்சர், "புதிய பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளம் ஒரு கடினமாகவே இருந்தது. பந்து ஆடுகளத்தில் நின்று வந்ததோடு, சில நேரங்களில் மிகவும் தாழ்வாகவும் சென்றது. இதனால் புதிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர். ஆனால், சஞ்சு சாம்சன் போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நிலைத்து நின்று விளையாடும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் எளிதாகத் தெரிந்தது. அவர் ஆட்டத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட விதம் அபாரமானது" என்று சிஎஸ்கே-வின் வெற்றியை உறுதி செய்த சஞ்சு சாம்சனைப் பாராட்டினார்.
இந்தத் தோல்வியிலும் ஒரு ஆறுதலான விஷயமாகச் சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தை அக்சர் படேல் குறிப்பிட்டார். 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு சமீர் ரிஸ்வி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது அணிக்கு ஒரு பாசிட்டிவான விஷயம் என்றார். மேலும், பந்துவீச்சின் போது தனக்குத் துணையாகச் செயல்படும் குல்தீப் யாதவ் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்ததாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி டெல்லி அணி 10 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பு குறித்துப் பேசிய அக்சர், "இனி வரும் போட்டிகளில் நாங்கள் ஒரு தவறு கூடச் செய்ய முடியாது. இனி எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற தெளிவான மனநிலையுடன் நாங்கள் களம் இறங்குவோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
