Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை.. வங்கதேச அரசு உத்தரவு.. முஸ்தாபிசுர் விவகாரத்தில் முற்றியது மோதல்

டாக்கா: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரை தங்கள் நாட்டில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று வங்கதேச அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட விவகாரம், தற்போது விஸ்வரூபம் எடுத்து இரு நாட்டு கிரிக்கெட் உறவையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்காக, வங்கதேசத்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ஒப்பந்தம் செய்திருந்தது. அதே சமயம், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை சுட்டிக்காட்டி வங்கதேச வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடக் கூடாது என இந்தியாவில் சில அமைப்புகள், அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

IPL 2026 BAN Bangladesh Bans IPL Telecast Amid Mustafizur Rahman and KKR Controversy

இந்த நிலையில், பிசிசிஐ தலையிட்டு, முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா அணிக்கு உத்தரவிட்டது. எந்தவிதமான தெளிவான அல்லது நியாயமான காரணமும் சொல்லாமல், தங்கள் நாட்டு வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டதை வங்கதேச அரசு கடும் அவமானமாகக் கருதியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மார்ச் 26, 2026 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு எந்தவொரு நியாயமான காரணமும் தெரியவில்லை. பிசிசிஐ-யின் இந்த முடிவு வங்கதேச மக்களை ஆழ்ந்த வேதனைக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், பொதுமக்களின் நலன் கருதி, மறு உத்தரவு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் மற்றும் அது தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் வங்கதேசத்தில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்படுகிறது."

இந்த விவகாரம் ஐபிஎல் ஒளிபரப்புத் தடையுடன் நின்றுவிடவில்லை. அடுத்த மாதம் (பிப்ரவரி 7) இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மையைக் காரணம் காட்டி, டி20 உலகக் கோப்பையில் தங்கள் அணி விளையாடவிருந்த போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த போட்டிகளை மாற்றச் சொல்லி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் உறவு முடிகிறதா?

ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில், தற்போது வங்கதேசமும் அதே பாதையில் செல்வது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 'முஸ்தாபிசுர் விவகாரம்' தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இருதரப்புத் தொடர்கள் நடைபெறுவது சந்தேகமே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, January 5, 2026, 13:43 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+