ஐபிஎல் தொடரை வைத்து 2027 உலக கோப்பைக்கான வீரர்களை கண்காணிக்க அகர்கர் முடிவு
மும்பை: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை 2027 அணியைத் தேர்வு செய்வதற்காக இத்தொடரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இணைந்து 2027 அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பையை நடத்துகின்றன. இந்த தொடருக்காக சுமார் 20 உத்தேச வீரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அஜித் அகர்கர், எஸ்.எஸ். தாஸ், ஆர்.பி. சிங், அஜய் ராத்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் இவர்களைக் கண்காணிப்பர். அகர்கர் மும்பை, தாஸ் கொல்கத்தா, சிங் மற்றும் ராத்ரா டெல்லி தலைநகர் பகுதி (NCR), ஓஜா பெங்களூரு/ஹைதராபாத் என அவரவர் பகுதிகளில் போட்டிகளைக் கண்காணிப்பர். "ஒவ்வொரு தேர்வாளரும் வாரத்திற்கு ஒரு போட்டி பார்க்கலாம். இல்லையேல் தொலைக்காட்சியில் பார்க்கலாம்," என்று பிசசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2028 டி20 உலகக் கோப்பையும் ஒலிம்பிக் போட்டிகளும் திட்டமிடப்பட்டிருந்தாலும், இந்த ஐபிஎல் தொடரின் முக்கிய கவனம் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான 20 வீரர்களின் செயல்திறனைக் கண்காணிப்பதே. புதிய ஐபிஎல் வீரர்களுக்கு ஒருநாள் உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு குறைவு. முக்கிய 50 ஓவர் வீரர்களின் செயல்திறன் மற்றும் உடல் தகுதி உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா குணமடைய அதிக காலம் தேவைப்படும். ஒருநாள் போட்டிகளுக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஜூன் 6 முதல் 10 வரை முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒற்றை டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தேர்வுக் குழு இதற்கு முழு பலம் கொண்ட இந்திய அணியைத் திட்டமிட்டுள்ளது. இப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்கு கணக்கில் வராது. ஆகஸ்ட் முதல் மார்ச் வரை ஒன்பது டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முன்னணி டெஸ்ட் வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்பார்கள். ஐபிஎல் காயங்கள் ஏற்படாத பட்சத்தில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பெறுவார்கள். "இந்திய டெஸ்ட் போட்டிகள் என்பது பரிசோதனைக்கு அல்ல. இந்தியா ஏ’ சுற்றுப்பயணங்கள் அதற்கானவை. தற்போது டெஸ்டில் பும்ரா, சிராஜ், பிரசித் மூவருமே தேர்வாளர்களின் முக்கிய கவனத்தில் உள்ளனர்," என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications