IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ 'செக்'
மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை கடும் கோபமடையச் செய்துள்ளது. வீரர்கள் தங்களது காதலிகளை அழைத்து வருவது முதல், தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் பிடிப்பது வரை பல விதிமீறல்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுவதாகக் கருதும் பிசிசிஐ, விரைவில் ஒரு அதிரடி எச்சரிக்கை அறிக்கையை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். ஆனால், இந்த சீசனில் வீரர்களின் தங்கும் அறைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சம்பந்தமே இல்லாத பல நபர்கள் வந்து செல்வது பிசிசிஐ-யின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஊடக மேலாளர் ரோமி பிந்தர், வீரர்கள் அமரும் 'டக்-அவுட்' பகுதியில் செல்போன் பயன்படுத்தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமீறல் ஊழல் தடுப்புப் பிரிவினரைக் கவலையடையச் செய்துள்ளது.

பிசிசிஐ-யை அதிகம் எரிச்சலடையச் செய்திருப்பது 'காதலி கலாச்சாரம்' தான். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களது காதலிகளுடன் எப்போதும் சுற்றி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதில் பல காதலிகள் சமூக வலைதளங்களில் பெரும் செல்வாக்கு கொண்ட 'இன்புளுயன்சர்களாக' இருப்பதால், அணிக்குள் நடக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் அணியின் திட்டங்கள் இவர்களின் மூலம் வெளியே கசிய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அஞ்சுகிறது. இது மேட்ச் பிக்சிங் போன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், காதலிகள் மற்றும் குடும்பத்தினர் வீரர்களுடன் தங்குவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், மைதானத்திலேயே 'வேப்பிங்' எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் பிடிக்கும் காட்சி கேமராவில் சிக்கியது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணம் எனப் பல முன்னாள் வீரர்கள் விளாசியுள்ளனர். அதுமட்டுமின்றி, சில அணி உரிமையாளர்களும் அதிகாரிகளும் வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா, "இந்த முறை பல அணிகளும் வீரர்களும் விதிமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்வதைக் கவனித்துள்ளோம். அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் வீரர்களின் அறைகளுக்குச் செல்வது ஊழல் தடுப்பு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இதை நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். விரைவில் அனைத்து அணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இனிமேல் விதிமீறல்களில் ஈடுபடும் அணிகள் மற்றும் வீரர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
