IPL 2026: எல்லை மீறிய ராஜஸ்தான் கேப்டன்.. பிசிசிஐ அதிரடி முடிவு.. ரியான் பராக்கிற்கு நெருக்கடி
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றி களிப்பில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, அதன் கேப்டன் ரியான் பராக் மூலமாக ஒரு மிகப்பெரிய சிக்கல் உருவெடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் அணி, தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. ராஜஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் ரியான் பராக் செய்த ஒரு காரியம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
முல்லன்பூரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின் போது, நேரடி ஒளிபரப்பில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கேமராக்கள் திடீரென அந்த அணியின் வீரர்கள் தங்கும் ஓய்வறை பக்கம் திரும்பியது. அப்போது கேப்டன் ரியான் பராக், 'வேப்' எனப்படும் மின்னணு சிகரெட்டை வாயில் வைத்து புகை விடுவது போன்ற காட்சிகள் மிகத்தெளிவாக நேரலையில் பதிவாகின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கவனத்திற்குச் சென்றுள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, ரியான் பராக்கிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. "ஐபிஎல் விதிமுறைப்படி மைதானத்திலோ அல்லது வீரர்கள் தங்கும் ஓய்வறையிலோ புகைபிடிக்க அனுமதி இல்லை. இது ஒரு தீவிரமான விதிமுறை மீறலாகும். இது குறித்து ரியான் பராக்கிடம் விளக்கம் கேட்கப்படும், அவர் அளிக்கும் பதிலைப் பொறுத்து ஐபிஎல் நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்" என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகளுக்குத் தடை இருக்கும் நிலையில், ஒரு பொறுப்பான கேப்டன் இப்படிச் செய்தது அவருக்கு அபராதம் அல்லது தற்காலிகத் தடையைப் பெற்றுத் தரலாம் என கூறப்படுகிறது. யாரேனும் காவல்துறையில் புகார் அளித்தால் ரியான் பராக்கிற்கு சட்டப்படியும் தண்டனை கிடைக்கக்கூடும். இந்த சர்ச்சைக்கு மத்தியில் ராஜஸ்தான் அணி ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 222 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 22 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.
223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூரியவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி 51 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தது. பஞ்சாப் வீரர் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினாலும், டோனோவன் பெரைரா 50 ரன்களும், ஷுபம் துபே 31 ரன்களும் எடுத்து ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.
இந்தப் போட்டியின் மூலம் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் அணி, புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், கேப்டன் ரியான் பராக் மீதான இந்த 'வேப்' புகார் அந்த அணியின் நற்பெயருக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டனே சர்ச்சையில் சிக்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பிசிசிஐ எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications