IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ 'ரெட் கார்டு'.. விதிகளை மீறினால் நடவடிக்கை
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ கொண்டு வந்த சில விதிகளை அணி உரிமையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மதிப்பதே இல்லை என கடும் அதிருப்தி அடைந்துள்ளது. உரிமையாளர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீரர்களுக்கு அருகே செல்வதும், விதிகளை மதிக்காமல் செயல்படுவதும் அதிகரித்துள்ள நிலையில், பிசிசிஐ தற்போது சாட்டையைச் சுழற்றியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) அளித்துள்ள சமீபத்திய அறிக்கையில், பல அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் போட்டி நடைபெறும் நேரங்களில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் (Restricted Zones) நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டம் நேரலையில் ஒளிபரப்பாகும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அமர்ந்திருக்கும் 'டக்-அவுட்' பகுதிக்கு மிக அருகே அணி உரிமையாளர்கள் செல்வது விதிமுறை மீறலாகும். இது போன்ற செயல்கள் போட்டியின் நேர்மையை (Integrity) பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, சில அணி உரிமையாளர்கள் மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கு துளியும் ஒத்துழைப்பு தருவதில்லை எனத் தெரிகிறது. "அணி உரிமையாளர்களின் நடத்தை மிகவும் கவலை அளிக்கிறது. அவர்கள் விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுகிறார்கள். ஆதாரமாக அவர்கள் டக்-அவுட் அருகே நிற்கும் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. சிலர் செல்போன்களைக் கூட மைதானத்திற்குள் எடுத்துச் செல்கிறார்கள். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை," என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், விஐபி பாக்ஸ் எனப்படும் சிறப்பு அறைகளில் இருந்தபடி வீரர்கள் அல்லது அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் நுழையும் போது அடையாள அட்டையைச் சரிபார்க்கும் பாதுகாப்பு ஊழியர்களிடம் சில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் புகாராக எழுந்துள்ளது. இதனையடுத்து, ஐபிஎல் அணிகளின் தலைமை அதிகாரிகளுடன் (CEO) பிசிசிஐ அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், உரிமையாளர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள் மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளில் இது போன்ற விதிமீறல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட அணிகள் மீது கடுமையான அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் கவனம் சிதறாமல் இருப்பதையும், சூதாட்டம் போன்ற தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாமல் தவிப்பதையும் உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிசிசிஐ எடுத்துள்ள இந்த கடுமையான முடிவு ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
