IPL 2026: மெகா பவுலிங் சாதனை.. பும்ரா, மலிங்காவால் முடியாததை செய்து காட்டிய புவனேஷ்வர் குமார்
பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒரு பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை புவனேஷ்வர் குமார் எட்டினார். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட கடினமான லெந்த் பந்தை ஆயுஷ் மத்ரே புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து எதிர்பார்த்ததை விட உயரமாக எழும்பியதால், அது சரியாக பேட்டில் படாமல் மிட்-ஆப் திசையில் நின்றிருந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. இந்த விக்கெட் மூலம் 200 விக்கெட்டுகள் என்ற இமாலய இலக்கை அவர் எட்டிப் பிடித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது அந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் இரண்டாவது பந்துவீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆவார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா போன்ற ஜாம்பவான்களால் கூட இதுவரை எட்ட முடியாத இந்த 200 விக்கெட் சாதனையை புவனேஷ்வர் குமார் நிகழ்த்தி காட்டியுள்ளார்.
இதுவரை 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 27.25 ஆகும். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 176 போட்டிகளில் 224 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் 191 போட்டிகளில் 193 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமானது முதல் தற்போது வரை துல்லியமான ஸ்விங் மற்றும் யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் புவனேஷ்வர் குமார், ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார். பும்ரா, மலிங்கா போன்ற ஜாம்பவான்களால் சாதிக்க முடியாததை ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார் சாதித்துள்ளது அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications