IPL 2026: தமிழ் புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே.. 2வது வெற்றியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.. KKR தோல்வி
சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த சென்னை அணி 192/5 ரன்கள் குவிக்க, கொல்கத்தா அணி 160/7 ரன்களுடன் தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய பணித்தது. சென்னை அணிக்கு, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சதம் அடித்து அசத்திய சஞ்சு, இந்த ஆட்டத்திலும் முதல் மூன்று பந்துகளிலேயே பவுண்டரிகளை விளாசி ஃபார்மைத் தொடர்ந்தார். அனுகுல் ராயின் பந்தில் ரோவ்மன் பவல் வசம் கேட்ச் கொடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துகளில் 7 ரன்களுடன் வெளியேறினார்.

ருதுராஜ் வெளியேறிய பிறகு, சஞ்சு சாம்சனுடன் ஆயுஷ் மத்ரே ஜோடி சேர்ந்தார். பவர் பிளே ஓவர்களிலேயே அணியின் ஸ்கோரை 72 ரன்களுக்கு உயர்த்திய மத்ரே, 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் வைபவ் அரோராவின் பந்தில் ரமந்தீப் சிங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மத்ரேவிற்குப் பதிலாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ், ஆட்டத்தை நிலைப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்த நிலையில், ஃபார்மில் இருந்த சாம்சன், அரை சதமடிக்க இன்னும் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கார்த்திக் தியாகி பந்தில் போல்டாகி 48 ரன்களில் வெளியேறினார். இது சென்னை அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.
சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து களமிறங்கிய சர்பராஸ் கான், அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் பொறுப்புடன் ஆடினார். அவர் 23 முக்கியமான ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைனின் சுழலில் சிக்கி போல்டானார். பிரெவிஸ், 29 பந்துகளில் 41 அதிரடி ரன்கள் குவித்து, அணியின் ஓட்ட விகிதத்தை சீராக வைத்துக் கொண்டார்.
பிரெவிஸ் தொடர்ந்து அதிரடி காட்டிய நிலையில், கார்த்திக் தியாகியின் பந்தில் வைபவ் அரோரா வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில், ஷிவம் தூபே 13 ரன்களுடனும், ஜேமி ஓவர்டன் 7 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்று, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோரை சவாலான 192/5 ஆக உயர்த்தினர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் சுனில் நரைன் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதிரடி வீரர் ஃபின் ஆலன், அன்சுல் காம்போஜ் பந்தில் 1 ரன்னில் வெளியேற, சுனில் நரைன் 24 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர்களை இழந்த கொல்கத்தா அணிக்கு, கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அன்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். எட்டாவது ஓவரில் அணி 50 ரன்களைக் கடந்த நிலையில், ரஹானேவும் ரகுவன்ஷியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதேசமயம், சென்னை அணி தனது சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது.
சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதலில், அன்க்ரிஷ் ரகுவன்ஷி, அகீல் ஹசைன் பந்தில் 27 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், ரஹானே 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் நூர் அகமது கொல்கத்தா அணியின் சரிவுக்கு வித்திட்டார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய அவர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
நூர் அகமது வீசிய பந்தில் கேமரூன் கிரீன், கோல்டன் டக் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து, ரிங்கு சிங் 12 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஷிவம் தூபேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நூர் அகமது தனது 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கொல்கத்தா அணி 85/5 என்ற நிலையில் தடுமாறியது.
ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் மற்றும் ரமந்தீப் சிங், அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி ஒரு நம்பிக்கை அளித்தாலும், வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததால், இவர்களின் முயற்சி போதாமல் போனது. கலீல் அகமது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறி, குர்ஜன்ப்ரீத் சிங் அவரது ஓவரை நேர்த்தியாக முடித்து வைத்தார்.
அன்சூல் காம்போஜ் தனது இறுதி ஓவரைச் சிறப்பாக வீச இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. . பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே இந்த வெற்றியைப் பெற்றது.


Click it and Unblock the Notifications