சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் துவம்சம் செய்தது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 5 முறை சாம்பியனான சென்னை அணி சந்தித்த படுதோல்வி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 15 வயதே ஆன ஒரு சிறுவன் சென்னை அணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் மேலும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் ஆகியோரின் அனல் பறக்கும் வேகத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறினர். ஜேமி ஓவர்டன் மட்டும் ஓரளவுக்குப் போராடி 43 ரன்கள் எடுத்ததால், சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஆனால், 128 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ஆட்டம் தான் போட்டியின் முக்கிய அம்சம். வெறும் 17 பந்துகளைச் சந்தித்த அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார்.
305.88 என்ற மலைக்க வைக்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடிய விதம், அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்களைத் திக்குமுக்காடச் செய்தது. "15 வயது சிறுவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடும்போது, அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே வீரர்கள் ஏன் இவ்வளவு மந்தமாக விளையாடினார்கள்?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் பயமில்லாமல் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை இந்தச் சிறுவன் சிஎஸ்கே வீரர்களுக்குப் பாடம் புகட்டியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வைபவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (38) அதிரடியால் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த மெகா தோல்வியால் சிஎஸ்கே-வின் ரன் ரேட் -4.171 ஆகக் குறைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. "கிரிக்கெட் விளையாட வயதல்ல, மன உறுதி தான் முக்கியம்" என்பதை வைபவ் சூர்யவன்ஷி இன்று நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்தத் தோல்வி சிஎஸ்கே அணிக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.