IPL 2026: வரலாற்று வெற்றியை பெற்றாலும், சிஎஸ்கே அணியில் பெரிய குறை இருக்கு.. சேவாக் விமர்சனம்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 103 ரன்கள் வித்தியாசத்திலான மெகா வெற்றிக்குப் பிறகு, வீரேந்திர சேவாக் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது மட்டும் அல்லாமல் புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும், சேவாக் ஒரு கவலையைச் சுட்டிக் காட்டினார். சஞ்சு சாம்சன் மட்டுமே அவர்களுக்காகத் தொடக்கத்தில் ரன்கள் குவிப்பதாகவும், நல்ல ஃபார்மில் இருந்த ஆயுஷ் மத்ரே அணியிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஞ்சு சாம்சன் ரன் எடுக்கத் தவறி, மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால், சென்னை அணி மீண்டும் சிரமப்படும் என்று சேவாக் கணித்தார். இது குறித்து பேசிய அவர் "நாம் இப்போது சென்னையைப் பாராட்டுகிறோம், ஆனால் தற்போது ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே ரன் அடிக்கிறார். அவர் ஒரு நாள் சொதப்பினால், மற்றவர்கள் ரன் குவிக்கவில்லை என்றால், அவர்களுக்கு மீண்டும் அதே கதைதான்.
ஒரு பேட்ஸ்மேனை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. மாத்ரே ரன் குவித்தார், ஆனால் அவர் அணியில் இல்லை. கெய்க்வாட், துபே, பிரெவிஸ் போன்ற வீரர்கள் ஃபார்முக்கு வந்து சாம்சனுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர்கள் நம்புவார்கள்" என்று சேவாக் கூறினார்.
சஞ்சு சாம்சன் தனது இந்த சீசனின் இரண்டாவது சதத்தையும், ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த ஐந்தாவது சதத்தையும் பதிவு செய்தார். அவரது அற்புதமான ஆட்டத்தின் மூலம், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207/6 ரன்கள் குவித்தது. அதன்பின்னர், மும்பை அணியை 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
சாம்சனின் அசத்தலான ஆட்டத்தை சேவாக் பாராட்டினார். "அவர் 10 ரன்களுக்குள் ஆட்டமிழப்பார் அல்லது நல்ல தொடக்கம் கிடைத்தால் பெரிய ஸ்கோரை அடிப்பார். கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சதமாக மாற்றுவது நல்ல விஷயம். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால், அவர் சிறிது பொறுப்புடன் விளையாட வேண்டியிருந்தது. ஆனால் அது ஒரு சிறந்த இன்னிங்ஸ். அவர் தனது பணியை அமைதியாக, மிகச் சிறப்பாகச் செய்தார்" என்று சேவாக் குறிப்பிட்டார்.
சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 187.04 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் 101* ரன்கள் எடுத்தார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகப் பெற்ற தோல்வி ஒரு "முழுமையான தோல்வி" என்று வர்ணித்தார்.
முந்தைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்ற போதும், திலக் வர்மா மட்டுமே பேட்டிங்கில் தனியாளாக ரன்கள் குவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மூத்த வீரர்கள் பொறுப்பேற்று மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மோஹித் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "அவர்கள் வெற்றி பெற்ற ஆட்டத்திலும் திலக் மட்டுமே ரன் எடுத்தார். இது ஒரு முழுமையான தோல்வி. மும்பை முன்னேற வேண்டுமெனில், அவர்களின் மூத்த வீரர்கள் முன்வர வேண்டும். கூடுதல் பொறுப்பு அவர்கள் மீது உள்ளது. சூர்யா எப்படி ரன் எடுக்கிறார், கேப்டன் எப்படி முடிவுகளை எடுத்து தனது ஆட்டத்தைத் தொடர்கிறார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
சூர்யகுமார் யாதவ் இதுவரை ஏழு ஆட்டங்களில் இருந்து வெறும் 156 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஆறு இன்னிங்ஸ்களில் 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, மீண்டு வர வேண்டுமெனில், மூத்த வீரர்களிடமிருந்து நிலையான பங்களிப்பு தேவை.


Click it and Unblock the Notifications