சென்னை: ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி காட்டியது. இரண்டாவது பெரிய பட்ஜெட்டுடன் பங்கேற்ற சிஎஸ்கே, தனது நிதியில் பெரும் பகுதியை இரண்டு அன்கேப்டு ஆல்-ரவுண்டர்களுக்காக செலவிட்டது. உ.பி. சுழற்பந்து ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானின் விக்கெட் கீப்பர் கார்த்திக் ஷர்மாவுக்கு தலா ₹14.20 கோடி அளிக்கப்பட்டு, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையுள்ள அனுபவமற்ற வீரர்கள் ஆனார்கள்.
சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்துகொண்ட பிரஷாந்த் வீர், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் எதிர்கால வாரிசாகப் பார்க்கப்படுகிறார். 20 வயதுடைய அவர் இடதுகை சுழற்பந்து வீச்சுடன், மிடில்-ஆடரில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறனும் கொண்டவர். கார்த்திக் ஷர்மா நல்ல மிடில்-ஆடர் அதிரடி வீரர் என்றாலும், சிஎஸ்கேயின் நீண்ட விக்கெட் கீப்பர் பட்டியலில் அவர் பின்பே வருவார்.

மேலும், சிஎஸ்கே மும்பை ஆல்-ரவுண்டர் அமன் கான் (புதுச்சேரிக்கு விளையாடுபவர்), மேற்கிந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹோசைன், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மேத்யூ ஷார்ட், இந்திய வீரர் ஷர்பராஸ் கான், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, ராஜஸ்தான் லெக்-ஸ்பின்னர் ராகுல் சாஹர் உள்ளிட்ட பல வீரர்களையும் இணைத்துள்ளது. இருப்பினும், இந்த புதிய வீரர்களில் பலர் முதல் 11 இல் இடம் பெற வாய்ப்பில்லை; பெரும்பாலானோர் மாற்று அல்லது சுழற்சி முறையில் பயன்படுத்தப்படலாம்.
சிஎஸ்கேயின் சிறந்த தொடக்க ஜோடியாக ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) மற்றும் ஆயுஷ் மாத்ரே தொடர்ந்து நீடிப்பார்கள். ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து வந்த சஞ்சு சாம்சன், நம்பர் 3 இடத்திற்குச் சரியான தேர்வாக இருப்பார். கடந்த சீசனில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக வந்து, நம்பர் 4 இடத்தை தனதாக்கிக்கொண்ட டெவால்ட் பிரெவிஸ், அடுத்ததாக களமிறங்குவார்.
பிரெவிஸுக்குப் பிறகு, பிரஷாந்த் வீர், ஷர்பராஸ் கான், கார்த்திக் ஷர்மா, ஊர்வல் படேல் ஆகிய நான்கு பேரில் இருவர் பேட்டிங் வரிசையில் அடுத்ததாக வருவார்கள்.
சிஎஸ்கேயின் பந்துவீச்சுப் பிரிவு கடந்த சீசனை விட மாறுபட்ட மற்றும் மேம்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும், இது அவர்களின் மிகப்பெரிய பலமாக அமையக்கூடும்.
மேட் ஹென்றி அணியில் இணைந்ததால், அவரும் நாதன் எல்லிஸும் இணைந்து விளையாடலாம். நூர் அஹ்மத் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகவும், கலீல் அஹ்மத் இடதுகை வேகப்பந்து வீச்சு விருப்பமாகவும் இருப்பார்கள்.
சிஎஸ்கேவின் சிறந்த லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மஹாதேரே, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, ஷர்பராஸ் கான், பிரஷாந்த் வீர், தோனி (விக்கெட் கீப்பர்), நாதன் எல்லிஸ், நூர் அஹ்மத், கலீல் அஹ்மத். இம்பேக்ட் வீரர்களாக மேட் ஹென்றி அல்லது ராகுல் சாஹர் களமிறங்க வாய்ப்புள்ளது.