மும்பை: இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின், பிக் பாஷ் லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் கேப்டன் நாதன் எல்லிஸின் பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், எல்லிஸ் தனது நான்கு ஓவர் பந்துவீச்சில் 30 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி, தமது அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.
வருகின்ற 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எல்லிஸ் விளையாடவிருப்பதால், அவரது தற்போதைய செயல்பாடு, ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி நிர்வாகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கணித்துள்ளார்.

எல்லிஸின் பந்துவீச்சைப் பாராட்டி, அஷ்வின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"மஞ்சள் நிற பாய்ஸ், அவர் எப்படி உருவாகியுள்ளார் என்பதில் மகிழ்ச்சியடைவார்கள். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக இன்று 4-0-30-3. மிக முக்கியமாக, பந்துவீச்சின் கடைசி ஓவர்களில் (death overs), 17 மற்றும் 20 ஆம் ஓவர்களை வீசி, தனது யார்க்கர்களையும் வேக மாற்றத்தையும் கச்சிதமாகப் பயன்படுத்தி, 2-0-15-2 என்ற புள்ளிவிவரங்களைப் பதிவு செய்தார்.
'பாக்கில்' 2026 கோடைகாலத்திற்கான டெத் ஓவர்களில் எல்லிஸின் இரண்டு ஓவர்கள் தீர்மானித்துவிடலாம் கூறுவது பாதுகாப்பானதா?" என அஸ்வின் குறிப்பிட்டிருந்தார். ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட சிட்னி தண்டர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெறவிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, சென்னையில் அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, தொடர் தொடங்குவதற்கு முன்னரே அவர் போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டார்.
ரெனிகேட்ஸ் அணிக்கு எதிராக ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹோபர்ட் அணியின் டாப் ஆர்டரை, ஆடம் ஜம்பா, ஒரே ஓவரில் டிம் வார்ட் மற்றும் பென் மெக்டெர்மாட்டை வீழ்த்தினார். ஹோபர்ட் வீரர்களில் யாரும் 30 ரன்களைத் தாண்டாத போதும், மேத்யூ வேட் 30 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அணியின் இன்னிங்ஸை வழிநடத்தினார்.
தனது ஆட்டத்தின் கடைசி கட்டங்களில், மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அதிரடியாக ரன்களைக் குவித்த வேட், ஆறு பந்துகள் மீதமிருக்க வெற்றியை உறுதி செய்தார். ரேஹான் அஹமதுடன் (23 ரன்கள்) இணைந்து 38 ரன்கள் சேர்த்த முக்கிய பார்ட்னர்ஷிப்பும் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது.
முன்னதாக, முதலில் பேட் செய்த ரெனிகேட்ஸ் அணிக்கு, ஜோஷ் பிரவுன் மற்றும் டிம் சீஃபர்ட் சிறப்பாகத் தொடங்கினர். ஆனால், நாதன் எல்லிஸின் சிறப்பான பந்துவீச்சு அவர்களது ரன்வேகத்தைத் தடுத்து நிறுத்தியது. சில வீரர்கள் நல்ல தொடக்கங்களை பெற்றபோதிலும், ரெனிகேட்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.