IPL 2026: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தடுமாறுவதற்கு காரணமே இது தான்.. பயிற்சியாளர் பிளமிங் கருத்து
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஃபார்மிற்கு டி20 போட்டியின் 'இயல்பே' காரணம் என தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் ரன்களைக் குவிக்கத் தொடங்கும் வரை, அணி அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த சீசனில் கெய்க்வாட் ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பல ஆட்டங்களில், அவர் அதிரடி காட்டாமல், எச்சரிக்கையாகவே விளையாடினார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 105 என்ற அளவில் மோசமாக உள்ளது. ஆரம்பத்தில் தோனி மற்றும் டெவால்ட் ப்ரெவிஸ் இல்லாததால் மிடில் ஆர்டர் அனுபவமற்றதாக இருந்தால் ருதுராஜ் பொறுப்புகளை எடுத்து கொண்டு மெதுவாக விளையாடியதாக கூறப்பட்டது. ஆனால், ப்ரெவிஸ் திரும்பி வந்த பின்னரும் நிலைமை மாறவில்லை.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான சிஎஸ்கே போட்டிக்கு முன செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபிளெமிங், "நாங்கள் பல விஷயங்களில் கடுமையாக உழைக்கிறோம். அவை அணி, தலைமைப் பதவி, வீரர் என அனைத்திலும் அடங்கும். ருதுராஜ் நன்றாகவே இருக்கிறார், தேவையான ரன்கள் வரவில்லை, அதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். இது டி20 போட்டியின் இயல்பாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
"அவர் சிறப்பாகப் பயிற்சி செய்து, பந்துகளை நன்றாக அடிக்கிறார். பாசிட்டிவான மனநிலையில் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஃபார்முக்கு வரவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக அவர் ஒரு தரமான வீரர். ஓரிரு ஆட்டங்களுக்கு நாங்கள் அவருக்குப் பக்கபலமாக இருந்து, அவர் ஃபார்முக்கு திரும்பினால், சிஎஸ்கே நகரும்" என்று ஃபிளெமிங் விளக்கினார்.
"மிகவும் அரிதாகவே ஒருவர் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்துவார். ஆனால், வீரர்கள் ஃபார்மில் வந்து செல்வதும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் அணிக்கு நல்லது. அவர் கடுமையாக உழைக்கிறார்; அவருக்கு நிறைய ஆதரவும் இருக்கிறது," என்று ஃபிளெமிங் தெரிவித்தார். சிஎஸ்கேயின் அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு கேப்டன்சி அழுத்தம் குறைந்தாலும், அணியில் அவரது இடம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, தோனி விரைவில் அணிக்குத் திரும்ப உள்ளதால், அவரை அணியில் எங்கு சேர்ப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய ஃபிளெமிங், "நாங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறோம். புதிய வழிகளை எப்போதும் தேடுகிறோம். ஆனால், உங்கள் கேப்டனை முழுமையாக ஆதரிக்க வேண்டும். ருதுராஜின் ஃபார்ம் விரைவில் மீண்டு வரும் அவர் மிகவும் திறமையான வீரர். இந்த வரிசையில் அவர் பங்களிக்காமல் இருக்க முடியாது," என்று பிளமிங் கூறினார்.


Click it and Unblock the Notifications