IPL 2026: CSK வெற்றியை முகேஷ் சௌத்ரிக்கு சமர்பிக்கிறோம்.. சரியான திசையில் செல்கிறோம்- ருதுராஜ்
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் சனியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்திருக்கிறது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை 100 ரன்கள் மேல் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்று இருக்கிறது.
இந்த சூழலில் போட்டிக்கு பின்பு பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், தாயாரை இழந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற முகேஷ் சவுத்ரியை வெகுவாக பாராட்டினார். இது குறித்து பேசிய அவர், கடினமான சூழலில் தான் முகேஷ் சவுத்ரி இன்று விளையாடினார். அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.

இதுபோன்ற சூழலில் கிரிக்கெட் விளையாடுவது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அணிக்கு அவர் தேவைப்படுவார் என்பதை உணர்ந்து, அணிக்கு திரும்பினார். அனைத்து பாராட்டுக்களும் அவருக்கு தான் சேரும். எப்போதெல்லாம் எங்களுக்கு அவருடைய பங்களிப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர் எங்களுடன் இருந்தார்.
உண்மையிலே டாஸ் வீசப்பட்டபோது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆடுகளமும் காய்ந்த நிலையிலும் கொஞ்சம் புற்களும் இருந்தது. இதனால் முதல் இரண்டு ஓவர்களில் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன் பிறகு அதிரடி காட்ட வேண்டும் என்று நினைத்தோம்.
எனவே இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் மேல் குவித்தாலே போதுமானது என்று நினைத்தோம். அதேபோன்று பந்துவீச்சில் அகில் ஹூசேனும் நூறு அகமதும் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த போட்டியில் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்தார்கள். சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.
எங்களுடைய பந்துவீச்சும் கடந்த போட்டிகளை விட இப்போது முன்னேறி வருகிறது. எங்களுடைய பந்துவீச்சு தற்போது தான் சரியாக செயல்பட தொடங்கி இருக்கிறது என்று நினைக்கின்றேன். நாங்கள் சரியான திசை நோக்கி செல்கின்றோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்து வருகின்றோம்.முகேஷ் எங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தது. போட்டியில் உத்வேகத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றியது.
இதைப் போன்று அன்சூல் காம்போஜுன் சிறந்த முறையில் பந்து வீசினார். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஓவர்டன் எங்களுக்கு விக்கெட் எடுத்து தருகிறார். எங்கள் அணியில் ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து விளையாடுகிறார்கள். அடுத்த போட்டியில் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த வெற்றியை கொண்டாடினாலும் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications