CSK: "சஞ்சு சாம்சன் வந்ததால் பயத்தில் இருக்கும் ருதுராஜ்".. சிஎஸ்கே கேப்டன் குறித்து வாகன் பேச்சு
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த சீசனில் 10வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இந்த ஆண்டும் அதே நிலையில் நீடிப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஜோடி இன்னும் ரன் குவிக்கத் தொடங்காதது கவலையை அளிக்கிறது.
இந்தச் சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல் ஆகியோர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளனர். சஞ்சு சாம்சனின் வருகையால் ருதுராஜின் கேப்டன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து மைக்கேல் வாகன் பேசுகையில், "சஞ்சு சாம்சனின் வருகையால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்று சைமன் டௌலிடம் கேட்டார். அதற்கு டௌல், "நிச்சயமாக" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய வாகன், "ஐபிஎல் தொடரின் இளம் கேப்டன்களில் ஒருவரான ருதுராஜுக்கு அணி நிர்வாகம் முழு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால், திடீரென ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டனான சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. பல ஆண்டுகளாக ஒரு விக்கெட் கீப்பர்-கேப்டன் (தோனி) வழிநடத்திய அணியில், இப்போது மற்றொரு விக்கெட் கீப்பர்-கேப்டன் வந்திருப்பது ருதுராஜுக்கு ஒருவித மிரட்டலாகவே இருக்கும். இது ஆட்டத்திலும் எதிரொலிக்கும்" என்று தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், சென்னையில், தென்னிந்திய மண்ணில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இரண்டு சிறந்த வீரர்களைக் கொடுத்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. எனவே அவர் மீதான எதிர்பார்ப்பும், அழுத்தமும் மிக அதிகமாக உள்ளது. உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சன், சிஎஸ்கே-வில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கிறதா அல்லது உண்மையிலேயே ருதுராஜ் பயப்படுகிறாரா என்பது வரும் போட்டிகளில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications