சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் தாங்கள் எதிர்பார்த்த பெரும்பான்மையான வீரர்களை வாங்கி விட்டதாகவும், சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிக அளவு இளம் வீரர்களை குறி வைத்து வாங்கியது ஏன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சிஎஸ்கே சமூக வலைத்தள பக்கத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் முதலில் கேமரன் கிரீனை வாங்க முயற்சித்தோம்.

கேமரன் கிரீன் வந்தால் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கும் என்று எண்ணினோம். இதற்காக 25 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முயற்சித்தோம். ஆனால் எங்களிடம் இருந்த பணத்தில் ஒரு 50 சதவீதம் ஒரு வீரருக்காக கொடுத்து விட்டால் மற்ற இளம் வீரர்களை வாங்க முடியாது என்று பயந்தோம். இதனால் தான் கேமரன் கிரீனை வாங்காமல் விலகி விட்டோம்.
டி20 கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. 2018 ஆம் ஆண்டு வயதான வீரர்களை முழுமையாக வாங்கி இருந்தோம். அப்போது கோப்பையை வென்றோம். தற்போது பவர் ஹீட்டிங் முக்கியமான ஒரு அம்சமாக டி20 யில் மாறிவிட்டது. இதனால் அதற்கு ஏற்ப இளம் வீரர்களை அதிக அளவு தேர்வு செய்தோம். ஜடேஜா வேறு அணிக்கு சென்று விட்டதால், அவருக்கு மாற்று வீரராக பிரசாந்த் வீரை தேர்வு செய்தோம்.
எங்கள் அணியின் திறமை அறியும் குழுவினர் பல்வேறு வீரர்களை சோதித்து ,அதில் அவர்கள் அனைவரும் சொன்ன முதன்மையான பெயர் பிரசாந்த் வீர்தான். இதை அடுத்து அவரை சென்னைக்கு வரவழைத்து பரிசோதித்தோம். அப்போது அவருடைய திறமையை பார்த்து ஸ்ரீகாந்த், ஸ்ரீராம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இந்தப் பையனிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது.
ஏலத்தில் வாங்கி விடுங்கள் என்று கூறினார்கள். ஜடேஜாவை போல் நல்ல சுழற் பந்துவீச்சாளர், ஃபில்டர் பேட்டிங்கும் அதிரடியாக ஆடுகிறார் என்பதால் அவரை நாங்கள் தேர்வு செய்திருக்கின்றோம். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன், பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.ஏற்கனவே கடந்த சீசனில் எங்களுடைய அணியை பாதி அளவு கட்டமைத்து விட்டோம். சஞ்சு சாம்சன், பிரவீஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
தற்போது பந்து வீச்சிலும் மாட் ஹென்றி, zoulkes போன்ற வீரர்களை வாங்கி இருக்கிறோம். இதனால் கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் இம்முறை சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ருதுராஜ் தற்போது கேப்டனாக சிறந்து விளங்குகிறார். இதனால் இம்முறை நாம் கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது என்று தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.