ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக சிஎஸ்கே மாபெரும் சாதனை.. யாருமே செய்யல
சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சனிக்கிழமை அன்று நடந்த இப்போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.
இந்த வெற்றி சிஎஸ்கே அணியின் நட்சத்திர பட்டியலில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், இளம் வீரர் கார்த்திக் சர்மா 54 ரன்களும் குவித்து, இருவரும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியானது சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் கிடைத்ததோடு, சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக நிலைநிறுத்தியது. இதுவரை இரு அணிகளும் மொத்தமாக 41 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 வெற்றிகளையும், மும்பை இந்தியன்ஸ் கடந்த 18 ஆண்டுகளில் 21 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி எப்போதுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், கடைசி 8 போட்டிகளில் சிஎஸ்கே அணி 7 ஆட்டங்களில் வென்று பதிலடி தந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், எந்தவொரு அணிக்கும் எதிராக ஒரு குறிப்பிட்ட அணி 20 வெற்றிகளைப் பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சாதனை முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் (17 வெற்றிகள்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (17 வெற்றிகள்) போன்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் சென்னை அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடிக்க, மும்பை அணி தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியுள்ளது.


Click it and Unblock the Notifications