IPL 2026: சிஎஸ்கே-வின் அந்த வியூகம்.. மிரண்ட மும்பை இந்தியன்ஸ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
மும்பை: டி20 கிரிக்கெட்டில் பொதுவாக பவுண்டரி எல்லையில் ஃபீல்டர்களை நிறுத்தி ரன்களைக் கட்டுப்படுத்துவதே வழக்கமான வியூகம். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் செய்த காரியம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. டி20 போட்டியை ஒரு டெஸ்ட் மேட்ச் போல மாற்றி, மும்பை பேட்ஸ்மேன்களைச் சுற்றி 'ஸ்லிப்' மற்றும் 'ஷார்ட் லெக்' ஃபீல்டர்களை நிறுத்தி சிஎஸ்கே அணி விரித்த வலை, மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே நிலைகுலையச் செய்தது. ஒரு டி20 போட்டியில் இவ்வளவு ஆக்ரோஷமான ஃபீல்டிங் அமைப்பை ஒரு கேப்டன் எப்படித் துணிச்சலாக அமைத்தார்? என்ற ஆச்சரியமும் எழுந்துள்ளது.
வான்கடே மைதானத்தில் 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச வரும்போது டி20 போட்டிகளில் ஃபீல்டர்கள் ரன்களைத் தடுக்கத் தூரமாக நிற்பார்கள். ஆனால், சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது பந்துவீசும் போது, ருதுராஜ் கெய்க்வாட் ஆடுகளத்தில் ஒரு மாற்றம் செய்தார். பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் 2 ஸ்லிப் ஃபீல்டர்கள், ஒரு ஷார்ட் லெக் மற்றும் ஷார்ட் கவர் என டெஸ்ட் போட்டிகளில் வைப்பது போன்ற ஃபீல்டிங் வியூகத்தை அமைத்து மும்பை வீரர்களை மிரள வைத்தார்.

இந்த ஆக்ரோஷமான வியூகத்தால் மும்பை பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் எடுக்கக் கூட வழியில்லாமல் திணறினர். அகீல் ஹொசைன் வீசிய பந்துகள் ஸ்லிப் திசையில் கேட்ச் ஆக மாறுமோ அல்லது பேட்டில் பட்டு அருகில் நிற்கும் வீரர்களிடம் தஞ்சமடையுமோ என்ற பயத்திலேயே மும்பை வீரர்கள் விளையாடினர். இதனால் ஏற்பட்ட கடும் அழுத்தத்தால், மும்பை அணி 11 ரன்களுக்குள்ளேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆட்டத்தின் முடிவில் மும்பை இழந்த 10 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகளைச் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். வான்கடே மைதானத்தில் ஒரு ஐபிஎல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 207 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி, பந்துவீச்சிலும் தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது. 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை பெற்ற இந்த வரலாற்று வெற்றிக்கு ருதுராஜின் அந்த 'டெஸ்ட் மேட்ச்' ஃபீல்டிங் வியூகம் ஒரு மிக முக்கிய காரணமாக அமைந்தது. டி20 போட்டியில் நிலவும் வழக்கமான பாணியை உடைத்து, புதுமையான முறையில் மும்பையைச் சிதறடித்த சிஎஸ்கே அணியின் இந்த வியூகம் பிளே ஆஃப் பந்தயத்தில் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு, தோனியின் பாணியிலான ஒரு மாஸ்டர் பிளான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
