IPL 2026- 200 ரன்களை தாண்டியது ஆச்சரியமாக இருக்கு.. நான் கொஞ்சம் களத்தில் நின்னு இருக்கனும்-ருதுராஜ்
பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவி புள்ளி பட்டயலில் பத்தாவது இடத்தில் தொடர்கிறது. கடந்த சீசனில் வரலாற்றில் முதல் முறையாக பத்தாவது இடத்துடன் சிஎஸ்கே அணி நிறைவு செய்த நிலையில் தற்போதைய சீசன் பல இளம் வீரர்கள் வந்துள்ள நிலையில் பந்துவீச்சு படுமோசமாக இருப்பதால் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது.
குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. 251 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 207 ரன்கள் வரை குவித்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நாங்கள் எடுத்த தொடக்கத்திற்கு பிறகும் 200 ரன்களை தாண்டி அடித்திருப்பது உண்மையிலே எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. எங்கள் அணியில் சர்பராஸ்கான்,ஓவர்டன், பிரசாந்த் வீர் போன்ற வீரர்களும் சிறப்பாக பேட்டிங்கில் ரன்களை குவித்தனர். நான் மட்டும் கொஞ்சம் பேட்டிங்கில் பங்களித்து இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும்.
எனவே இந்த தோல்விக்கு நிச்சயம் நான் தான் காரணம். நாங்கள் டிம் டேவிட் விக்கெட்டை வீழ்த்தி விட்டோம். ஆனால் அது விதிகளுக்கு மீறிய பந்தாக மாறிவிட்டது. அதன் பிறகு தான் அவர் மைதானத்தில் நான்கு பக்கமும் எங்களுடைய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். உண்மையிலே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாங்கள் பந்து வீசும் போது பவர் பிளேவில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். விராட் கோலி போன்ற வீரர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை கொடுத்து விட்டோம். பவர்பிளேவில் நாங்கள் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால், எங்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகம் கிடைத்திருக்கும். இன்றைய ஆட்டத்தில் கூட நாங்கள் 13 அல்லது 14வது ஒவர் வரை கட்டுக்கோப்பாகத்தான் பந்து வீசினோம்.
அதன் பிறகு தான் போட்டி எங்கள் கையை விட்டு நழுவி சென்று விட்டது என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் பதினோராம் தேதி டெல்லி கேப்பிட்டல் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி தழுவியதால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக நான்காவது ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications