IPL 2026: 210 இல்ல.. 240 அடித்திருந்தாலும் சிஎஸ்கே வென்று இருக்காது.. அஸ்வின் நண்பர் பிரசன்னா சாடல்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் தோல்வியை தழுவியது.இது குறித்து அஸ்வின் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட அவருடைய நண்பரும் கிரிக்கெட் வல்லுநருமான பிரசன்னா, சிஎஸ்கே அணியை கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று 210 ரன்கள் அல்ல, சிஎஸ்கே 240 ரன்கள் அடித்திருந்தாலும் நிச்சயம் தோல்வியை தழுவீர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் பிரசாந்த் வீரை எடுத்து இருந்தீர்கள்.

அவர் ஏழு பந்துகள் எதிர்கொண்டு 6 ரன்கள்தான் அடித்திருந்தார். அவருக்கு பதிலாக ஏன் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜிமி ஓவர்டன்னை தேர்வு செய்திருக்கக் கூடாது. சரி பிரசாந்த் வீரை ஜடேஜாவுக்கு மாற்று வீரராக தேர்வு செய்தீர்கள்.அவர் நேற்று ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
ஆட்டம் 17வது ஓவர்லே முடிந்து விட்டது. அப்படி இருக்கும் போது பிரசாந்த் வீர் எப்படி பந்து வீசுகிறார் என்று ஒரு ஓவராவது கொடுத்திருக்க வேண்டும்,அல்லவா? ஏன் அதை ருதுராஜ் செய்யவில்லை. உங்களுக்கு சுழற் பந்துவீச்சாளர் தான் தேவை, என்றால் அகில் ஹூசனை எடுத்து இருக்கலாமே? ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியாவது இரண்டு வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு ஞாபகமே இல்லை. தோனி போன்ற ஜாம்பவான்கள் வழிநடத்திய சிஎஸ்கே அணியின் நிலை நினைத்தால் உண்மையிலேயே ஏமாற்றமாக இருக்கின்றது. சேப்பாக்கம் மைதானம் என்பது சிஎஸ்கே வின் ஒரு கோட்டையாக இருந்தது. ஆனால் தற்போது சென்னை அணி வீரர்கள் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது வேறு ஏதேனும் பவுலரை மாற்ற வேண்டும் என்றால் கூட நல்ல ஒரு பவுலர் இல்லை. இரண்டு இளம் வீரர்களுக்கு அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்த பணத்தை வைத்து நல்ல பவுலர்களை தேர்வு செய்திருக்கலாம். ஆர் சி பி, பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் குறைந்த தொகையை வைத்து ஏலத்தில் நல்ல ஒரு அணியை உருவாக்கி இருந்தார்கள். ஆனால் சிஎஸ்கே அணி ஏலத்தில் அதிக தொகை வைத்திருந்த இரண்டாவது அணி என்ற பெயருடன் சென்று ஒரு மோசமான அணியை தான் தேர்வு செய்திருக்கிறது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட நான் அவரை விமர்சிக்க மாட்டேன். ஏனென்றால் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை ஏற்கனவே அவர் பலமுறை காட்டியிருக்கிறார். சஞ்சு சாம்சன், பிரவீஸ் போன்ற வீரர்கள் வந்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மேலும் பலமாகிவிடும். ஆனால் நீங்கள் எவ்வளவுதான் ரன்கள் சேர்த்தாலும், உங்களுடைய பந்து வீசும் அணி அதனை எளிதாக விட்டுக் கொடுத்து விடும்.
சிஎஸ் கே அணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நாங்கள் பேசுகிறோம். ஆனால் நாங்கள் அணி தேர்வு செய்த போது இது எல்லாம் சரி இல்லை என்று கூறும் போது ரசிகர்கள் எங்களை கடுமையாக திட்டினார்கள். நாங்கள் எங்களுடைய சொந்த ஊர் அணி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறோம். திரைப்படம் சரியில்லை என்றால் இயக்குனர், நடிகர் இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் ஆகியோரை விமர்சனம் செய்யுங்கள். படம் நல்லா இல்லை என்று கூறும் விமர்சகரை என் திட்டுகிறீர்கள்.அதுபோல்தான் இதுவும் என்று பிரசன்னா சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications